" கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுவது போல் இராணுவத்தினரின் ஆளனியை குறைக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கடந்த ஆட்சியை போலன்று சுயமரியாதையுடன் செயற்படக் கூடிய பொலிஸ் மற்றும் படையினரை உருவாக்கியுள்ளது" என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கூறினார். 

இராணுவத்தினருக்கு விருசர சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இரத்தினபுரி கெமுனு படைமுகாமில் நடைபெற்றது. அந்நிகழ்வில் அவர் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணமல்போன இராணுவத்தினரின் குடும்பத்தினர்கள் சுமார் 3000 பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அருனாசேன ஹெட்டியாராச்சி, இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் திருமதி அனோமா பொன்சேகா, சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரொகான் டயஸ் உள்ளிட்ட பலரும் சமூகமளித்திருந்தனர். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன கூறியதாவது, 

30 வருட கொடிய யுத்தத்தில் நாம் பல அனுபவங்களை கொண்டுள்ளோம். அதில் பலரும் பாதிக்கப்பட்டனர். 

1983 ஆண்டு ஜூலை கலவரத்தில் பலத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதனையும் கடந்த காலத்தில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டதனையும் நாம் மறந்து விடவில்லை. 

இந்த கொடிய யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க உறுதிபூண்டுள்ளது. 

இந்த வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு இந்த சிறப்புரிமை அட்டை வழங்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சார்ந்த 48 நிறுவனங்களில் இந்த அட்டை மூலம் நிவாரணங்களை பெற்றுக் கொள்ள முடியும். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அணுசரணையில் இந்த சிறப்புரிமை அட்டை வழங்கப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் அனைத்து முப்படையினர்களுக்கும் சிவில் பாதுகாப்பு படையினர்களுக்கும் வழங்கப்படும். இராணுவத்தினரை சிறையிலடைத்துவிட்டு புலிகளை விடுவிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாம் அவ்வாறு செய்யவில்லை. அதற்கான தேவையுமில்லை. கடந்த ஆட்சிகாலத்தில் தான் இராணுவத்தினர் கூலிப்படைகளாகவும் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார சேவையாளர்களாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் கடமை புரிந்தனர். அதனை எமது இன்றைய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்து முப்படைகளையும் மரியாதையுடன் நடாத்துவதுடன் அவர்களின் சேமநலனில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டளவில் வீடில்லா அனைத்து இராணுவத்தினர்களுக்கும் காணியும் வீடும் பெற்றுக் கொடுக்கப்படும். 

இலங்கையின் சட்டம் அனைவருக்கும் சமமாகும். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவார்கள். அதன்படி தவறு செய்த இராணுவத்தரப்பினர் நீதிமன்ற சட்டத்திற்குட்பட்டுள்ளனர்.  நீதிமன்ற,  பொலிஸ் நடவடிக்கைகளில் நாம் தலையிடுவதில்லை. 

சர்வதேச ரீதியில் இலங்கை படையினருக்கு பல்வேறு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. நாம் இராணுவத்தினரை பாதுகாக்கவே ஐ.தே.க/ ஸ்ரீ.ல.சு.கட்சி கூட்டு அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை குறை கூறுகின்றனர். 

வெளிநாட்டு நீதிபதிகள் எமது சட்டத்தில் தலையிட முடியாது. அவர்கள் மேற்பார்வையாளர்களாக கடமைப்புரிய அனுமதிக்கலாம். அது கூட இதுவரை இறுதி தீர்மானத்திற்கு உட்படவில்லை.

இராணுவத்தினரை குறைப்பதற்கு நாம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பிற்கும் எவ்விதமான இடையூறும் ஏற்படாது என்றார்.