காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட ரஷ்ய போர் விமானத்தை சிரிய இராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அந்நாட்டு அரச படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. 

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் அவ்வப்போது ரஷ்ய விமானங்கள் தாக்குதலையும் நடத்தி வருகின்றன. 

இதேவேளை, இஸ்ரேலும் ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரிய அரச படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.

 இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரிய கடற்கரையில் இருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியால் சென்றபோது திடீரென குறித்த விமானத்தின் தொடர்பு ராடாருடன் துண்டிக்கப்பட்டது. 

சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய போர் விமானம் காணாமல்போனது. எனவே, இஸ்ரேல் இராணுவத்தால் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில், ரஷ்ய விமானத்தை தவறுதலாக சிரிய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கையில்,

‘தாக்குதல் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததால் ரஷ்ய விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. இஸ்ரேலிய விமானங்களின் பொறுப்பற்ற செயல்களால் வேண்டுமென்றே அந்தப் பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 15 வீரர்களின் உடல்களை  தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.