தனது  உரையின்  ஆரம்பத்தில் மறைந்த  அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டதோடும் முன்னாள் காணி அமைச்சர் மறைந்த எம்.கே.டி. குணவர்தனவின் மறைவிற்கும் அனுதாபங்களை தெரிவித்ததோடு அதன் வெற்றிடத்திற்கு தான் தேசிய பட்டியலினூடாக நியமிக்கப்பட்டதையும்  நினைவு  கூர்ந்தார். 

அத்தோடு தனக்கு தேசிய பட்டியலை வழங்கிய ஐ.தே.கட்சி  தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சித் தவிசாளர் கட்சி செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக்கவிற்கும் நன்றிகளை தெரிவித்தார். 

அமைச்சர் சரத்பொன்சேகாவின் உரையில்   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததோடு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ யுத்த வெற்றியை தமக்கு  சாதகமாக்கிக் கொள்ள பொய்யான தகவல்களுடன் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார். 

முன்னாள் அமைச்சர் பஷில்  ராஜபக்ஷவையையும்  விமர்சித்ததோடு, அமைச்சரின் உரையில் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. என்றே அடையாளப்படுத்தினார்.  எந்தவொரு இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி என குறிப்பிடவில்லை. 

அத்தோடு இன்று தனது பிள்ளைகள் குடும்பத்தார் பழிவாங்கப்படுகின்றனர் என மகிந்த  ராஜபக்ஷ  எம்.பி. கண்ணீர் வடிக்கின்றனர். 

ஆனால் அன்று பொய் குற்றம் சாட்டி  சிறையில் அடைத்தது, எனது பெண்பிள்ளைகள் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டது, மருமகன் தனுன செய்யாத குற்றத்திற்கு தேடப்பட்டது. அவர் ஐந்து வருடம் தலைமறைவாக கஷ்டப்பட்டது.  எனது மனைவி நள்ளிரவு 12.00 மணிக்கு இரகசிய பொலிஸ் பிரிவில் விசாரிக்கப்பட்டது. இவையெல்லாம் குடும்பப் பழிவாங்குதல்கள் இல்லையா- என மகிந்த ராஜபக்ஷ  எம்.பி.யிடம் கேட்க விரும்புகிறேன். 

மகிந்த எம்.பி அன்று செய்த பாவங்கள் தான் இன்று எனது  கதிரையில் முன்னாள் எம்.பி.யாக உள்ளார்.   ஆனால் நான் அமைச்சராக பீல்ட் மார்ஷலால்  பதவி வகிக்கின்றேன் எனத் தெரிவித்ததோடு சிங்களப் பாடலொன்றின் சில வரிகளையும் சபையில் பாடிக் காட்டினார். 

அமைச்சர் சரத்பொன்சேகா சபையில் உரையாற்றும் போது எனது உரையை வெளியில்  இருந்து கொண்டு செவிமடுக்கும் ராஜபக்ஷ எம்.பி.சபைக்கு வரவேண்டும். 

எனது உரையில் பொய் ஏதும் இருந்தால் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கேள்வி கேட்கலாம் என்றும் தெரிவித்தார். 

இன்று  தேசப்பற்றை பற்றி பேசுபவர்கள் அன்று அநுராதபுரத்திற்கு அப்பால் போகவில்லை என்றார். 

இவ் உரையின் போது மகிந்த அணி சார்பு எம்.பி.க்களான  பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபே குணவர்த்தன, வாசுதேவ  நாணயக்கார ஆகியோர் சபையில் மெளனமாக அமர்ந்திருந்தார்கள். 

ஆனால்  மகிந்தவின் விசுவாசிகளான எம்.பி.க்களான  தினேஷ்குணவர்தன, விமல்  வீரவன்ச, கம்மன்பில போன்றோர் சபையில் இருக்கவில்லை. 

அத்தோடு யானைகள் திருடப்பட்ட பின்னணியில் கோதாபய ராஜபக்ஷ  இருப்பதாகவும் குற்றம்  சாட்டினார். 

இவ்வாறு மகிந்த ராஜபக்ஷ ,கோதாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ  போன்றோரை கடுமையாக  விமர்சித்தார். 

இவர்களது ஊழல் மோசடிகளை விசாரிக்க தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார். 

அமைச்சர் சரத் பொன்சேகாவின் உரையை நீண்ட நேரம் முன்னெடுப்பதற்கு அமைச்சர்களான ஜயந்த கருணாதிலக, லக் ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் தமது நேரத்தை வழங்கினர். 

அமைச்சர் சரத்பொன்சேகா உரையை முடித்தவுடன் ஆளும் தரப்பு அமைச்சர்கள் மேசையில் தட்டி வரவேற்றதுடன் அமைச்சருக்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.