(க.கிஷாந்தன்)

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் நேற்று இரவு 10.00 மணியளவில் பிக்குகள் பயணித்த கார் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவசர திருத்த பணிகளை மேற்கொள்ளும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணித்த பிக்குகள் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை பின்னவல பகுதியிலிருந்து அட்டன் வழியாக மாத்தளை நோக்கி பயணித்த கார் ஒன்றும் மாத்தளையிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த அட்டன் டிபோவிற்கு சொந்தமான அவசர திருத்த பணிகளை மேற்கொள்ளும் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.

கார் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சாரதி போதையில் இருந்ததாகவும் அவரை கைது செய்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்த சந்தேக நபரான சாரதியை இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த  விபத்து  தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.