வவுனியா, புதிய பஸ் நிலையம் முன்பாக இ.போ.சபை - தனியார் பஸ்ஸின் சாரதி, நடத்துனர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலால் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ், வவுனியா புதிய பஸ் நிலையம் முன்பாக தரித்து நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டிருந்த போது தனியார் பஸ் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் குறித்த இ.போ.சபை பஸ்ஸை நிறுத்தியமை மற்றும் குறித்த நேரத்துக்கு முன்னதாக இ.போ.சபை பஸ் வருகை தந்து தரித்து நின்றதாக தெரிவித்து முரண்பட்டனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து அக்கரைப்பற்று செல்வதற்கு தயாராகவிருந்த குறித்த சாரதியின் தனியார் பஸ்ஸை  இ.போ.சபை பஸ்ஸுக்கு முன்னால் சென்று பயணிகளை ஏற்றும் வகையில் நிறுத்தினர். இதன்போது இரு பஸ்களும் மோதிக் கொண்டதில் தனியார் பஸ்ஸுன் பக்க கண்ணாடி உடைந்ததுடன், சாரதி நடத்தினர்களுக்கிடையில் கைகலப்பும் ஏற்பட்டிருந்தது. 

இச்சம்பவத்தில் காயமடைந்த இ.போ.சபை பஸ் நடத்துனர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு பஸ்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.

இதன்காரணமாக யாழில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வவுனியா பெலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணித்தியாலமாக வேறு பஸ்ஸுக்காக காத்திருந்ததுடன் இரு பஸ்ஸின் சாரதி, நடத்துனர்களின் செயற்பாடு குறித்து கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.