சிவனடிபாதமலை பெயர் மாற்றமும், பெரும்பான்மையினரின் நிலைப்பாடும்!!!

Published By: Vishnu

16 Sep, 2018 | 08:49 AM
image

சிவனடிபாத மலை அடிவாரத்தில் பல வருடங்களாக மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த  பெயர்ப்பலகை அகற்றப்பட்டு  புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அமைக்கப்பட்டமை கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்தது. 

இது குறித்த உண்மை நிலைமையறியாது சிலர்  சமூக ஊடகங்களில்  இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது குறித்து உண்மை நிலைமையை  அறிய அவ்விடத்துக்கு நேரடியாக சென்றதில்  சில தகவல்களைப்பெறக்கூடியதாக இருந்தது. 

சிவனடிபாத மலை புனித பிரதேசமானது மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இரண்டுக்கும் உரித்தான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எனினும் இலங்கை மக்கள் உட்பட உல்லாசப்பயணிகள் அனைவரும் கூடுதலாக அட்டன் மற்றும் நோட்டன் மார்க்கத்தின் வழியாக நல்லதண்ணீர் பிரதேசம் சென்று அங்கிருந்தே தமது பயணத்தை இம்மலைக்கு மேற்கொள்கின்றனர். 

ஆரம்பத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் இப்பிரதேசம் இருந்தது. பின்பு புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு தற்போது இப்பிரதேசம் உள்வாங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டபோது சிவனடிபாதமலை பிரதேசம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் செல்வதை ஏற்க முடியாது என்றும் இது பௌத்த பிரதேசம் என்றும் சர்ச்சைகளை ஏற்படுத்திய அப்போதைய அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதிய பெயர்

உள்ளூராட்சி சபைத்  தேர்தல்களுக்குப் பின்னர்  ஆட்சியமைப்பதற்கு முதன் முதலாக கூடிய மஸ்கெலியா பிரதேச சபை கன்னி அமர்வின் போது இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதில் அப்பிரதேசமே பதற்றத்துக்குள்ளாகியிருந்தது. 

ஆனால் அன்றைய தினமான  மார்ச் 28 ஆம் திகதியன்றே மேற்படி புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அடிவாரத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்புனித பிரதேசம் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருப்பதை விரும்பாத சில இனவாத சக்திகளே இவ்வாறு திட்டமிட்டு அன்றைய தினம் இவ்வேலையை செய்திருக்கலாம் என இப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால் குறித்த பெயர்க்கல் ஆனது பக்தர் ஒருவரின் அனுசரணையில் வழங்கப்பட்டதாகும். அதில் அவரது பெயரும் பதிக்கப்பட்டுள்ளது. புதிய பெயர்க்கல் இவ்விடத்தில் வைக்கப்பட்டதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் பழைய பெயருடன் கூடிய பெயர்ப்பலகை அகற்றப்பட்டதற்கே நாம் விசனமடைந்துள்ளோம் என்கின்றனர் நல்லதண்ணீர் பிரதேச தமிழ் மக்கள்.

பெரும்பான்மையினத்தவர்களின் கருத்து

சிங்களத்தில் சிறிபாதய, ஆங்கிலத்தில் சிறிபாத, தமிழில் சிவனடிபாதம் என்ற விளக்கத்துடன் ஆரம்பத்தில் இருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு தற்போது மும்மொழிகளிலும் கௌதம புத்த பகவானின் ஸ்ரீ பாதஸ்தானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இப்பிரதேசத்தின்  கிராம அதிகாரி கருத்துத்தெரிவிக்கையில் இந்த திடீர் ஏற்பாடுகள் பற்றி இப்பிரதேசத்தில் எவரும் அறிந்திருக்கவில்லை என்பது முக்கியம். அதே வேளை நாம் பௌத்தர்கள் விகாராதிபதிக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகையால் இது குறித்து விமர்சிக்கும் அளவுக்கு எமக்கு ஆன்மிக ரீதியான அதிகாரங்கள் இல்லை என்பதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ளல் அவசியம்.  சிவனொளிபாதமலை உச்சியில் அமைந்துள்ள விகாரையின் பிரதான  விகாராதிபதி இரத்தினபுரியில் இருக்கின்றார். பக்தர் ஒருவரின் அனுசரணையில் புதிய பெயர்க்கல் இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இது இரு நபர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. எனினும் இவ்விடத்தின் தமிழ் அர்த்தம் மாற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் கருத்துத்தெரிவித்திருக்கின்றன ஆனால் சிங்கள மொழியிலும் ஆங்கிலத்திலும் கூட அர்த்தம் மாறுபட்டுள்ளதாகவே நாம் நினைக்கின்றோம். 

புத்தரின் புனித பாத ஸ்தானம் இருக்கின்ற இடம் மலையுச்சியிலாகும் ஆனால் இந்த பெயர்க்கல்லின் படி அடிவாரத்திலேயே இருப்பது போன்ற அர்த்தம் அல்லது மாயை உருவாகின்றது. இது இங்கு வருகை தரும் உல்லாசப்பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பாதஸ்தானத்துக்கு செல்லும் வழி என்று இருந்திருக்க வேண்டும். 

எது எப்படியானாலும் இங்குள்ள மக்கள் இது குறித்து அலட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். பருவ காலம் இல்லாவிட்டாலும் கூட வருடந்தோறும் மும்மதத்தவர்களும் வந்து செல்லும் புனித இடமாக இவ்விடம் உள்ளது என்று தெரிவித்தார். இதே வேளை இப்பிரதேச பெரும்பான்மையின மக்கள் கருத்துத்தெரிவிக்கையில் பெயர்மாற்றம் இங்குள்ள மக்களை பாதித்ததாகத்தெரியவில்லை. 

நாம் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவாலயத்தையும் நாம் வணங்குகின்றோம். எத்தனையோ வருடங்கள் இங்கு பல்லின மக்களும் வந்து செல்கின்றனர். இந்த பெயர் மாற்ற விவகாரத்தை பூதகரமாக்கி இன ஐக்கியத்தை குழப்பும் செய்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்பதே எமது கருத்து. 

எனினும் இரத்தினபுரி  விகாராதிபதிக்கு இச்சம்பவம் பற்றிய செய்திகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று கேள்வியுறுகிறோம்.. பழைய பெயருடன் மீண்டும் இவ்விடத்தில் ஒரு பெயர்ப்பலகையை வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக எமக்கும் தகவல்கள் வந்தவண்ணமுள்ளன என்றனர்.

மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர்

இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபைத்தலைவர் செண்பகவல்லி கருத்துத் தெரிவிக்கையில்,

இது மிகவும் உணர்வுபூர்வமாக அணுக வேண்டிய விடயம். புதிதாக மஸ்கெலியா பிரதே சபை ஸ்தாபிக்கப்பட்ட தினமன்றே இப்புதிய பெயர்க்கல் இங்கு வைக்கப்பட்டதாக எமக்குத்.தெரிவிக்கின்றனர். இது குறித்து நான் அரசாங்க அதிபரிடம் வினவிய போதும் அது குறித்து தனக்கு எவரும் அறிவிக்கவில்லையென்றே தெரிவித்தார். எமது மத உரிமையை விட்டுக்கொடுக்க முடியாத அதே நேரம் இவ்விவகாரத்தை மென்போக்கோடு அணுக வேண்டும். 

இது தொடர்பாக நான் ஆறுமுகன் தொண்டமானிடம் ஆலோசனைகளைப்பெற்றேன். அவரும் இதை பொறுமையாக கையாளும்படி கூறினார். பிரதான விகாராதிபதி இரத்தினபுரியில் இருக்கின்றார். இவ்வருடம் பருவ காலம் ஆரம்பிக்கும் தறுவாயில் அது குறித்து அவருடன் பேசலாம் என்றார். ஆகவே இவ்விவகராம் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக அவதானித்து வருகிறோம். அதற்கிடையில் எவரும் இதை வைத்து சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் படியான கருத்துக்களை சமூக ஊடகங்களிலோ அல்லது ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அடிவாரத்தில் சிவன் ஆலயம்

இது இவ்வாறிருக்க சிவனொளிபாத மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 9 ஆம் திகதி சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. உலக சைவத்திருச்சபையின் ஏற்பாட்டில் தீவெங்கினும் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக அன்றைய தினம் முதலாவது லிங்கம் மலையடிவாரத்திலமைந்துள்ள மேற்படி சிவனாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு பெருந்.தொகையான தமிழ், சிங்கள பக்தர்கள் வருகை தந்திருந்தமை முக்கிய விடயம். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கருத்துத்தெரிவித்த போது சிவனடி பாதமலை என்ற பெயர்ப்பலகை மாற்றப்பட்டமை வேதனையைத்தருகிறது என்றாலும் அது குறித்து எமது பிரதேச அரசியல் பிரமுகர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

அதே போன்று இங்கு சிவாலயம்  அமைக்கப்படுவதற்கும்  தற்போது லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கும் அனைத்து மக்களினதும் ஆதரவு கிடைத்துள்ளது. பெயர்ப்பலகை அகற்றப்பட்டாலும் பொது மக்கள் வழிபாட்டுக்காக சிவலிங்கம் இங்கு ஸ்தாபிக்கப்பட்டமையை நாம் சிவனின் அற்புதம் என்றே நினைக்கின்றோம். 

அதன் படி அவர் அருளால் மீண்டும் சிவனடிபாதம் என்ற பெயர் பழைய இடத்தில் மீண்டும் காட்சி தரும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்று தெரிவித்தனர். பக்தர்களும் மக்களும்  மிகத் தெளிவாகவே உள்ளனர். ஆகவே இவ்விடயத்தில் இன முறுகல்களை ஏற்படுத்தும் வீண் பிரசாரங்களை எமது மக்கள் மேற்கொள்ளாமலிருப்பதே சிறந்தது.

(சிவலிங்கம் சிவகுமாரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04