(க.கமலநாதன்)

நெல்லுக்கான தீர்வை விலையை 50 ரூபாவாக அதிகரிக்காமலும் உரமானியத்தை முறையாக வழங்காமலும் விவசாயிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதையிட்டு விவசாயிகள் அதிருப்பதி அடைந்துள்ளனர்.

அதனால் தற்போது மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஜே.வி.பி. தலைமையில் கொழும்பின் பிரதான 6 மார்க்கங்களை மறைத்து ஆர்பாட்டம் செய்து கொழும்பு நகரை ஸ்தம்பிதமடையச் செய்வோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் லால்காந்த தெரிவித்தார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக தம்புள்ளை, நீர்கொழும்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டங்களை முன்னெடுத்து நல்லாட்சி அரசாங்கத்தின் விவசாயிகளுக்கு எதிரான செயற்பாடுகளை உடனடியாக கைவிடுமாறு கோரிக்கை அழுத்தம் கொடுத்திருந்தோம். ஆனால் விவசாயிகள் போராட்டம் குறித்து அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. 

கொழும்பு - கண்டி பிரதான வீதி, கொழும்பு - காலி பிரதான வீதி, புத்தளம் - கொழும்பு - கடுவெலை கொழும்பு உள்ளிட்ட பிரதான ஆறுவீதிகளை மறைத்து ஆர்பாட்டங்களை முன்னெடுத்து கொழும்பு மாநகரை ஸதம்பிதமடையச் செய்வோம். இந்த ஆர்பாட்டங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதனால் அரசாங்கம் விவசாயிகளுக்கான உடனடி தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது சிறந்தது என்றார்.