(ரி.விரூஷன்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் நடைபெற்றுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்து நேரில் ஆராய்ந்த வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு, ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்துள்ளதா? மாகாணசபை உறுப்பினர்களின் விஜயத்தினால் உண்டான நன்மை என்ன? என எல்லை கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வடமாகாணசபை மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேசிவருவதுடன், மாகாணசபை உறுப்பினர்களின் விஜயத்தின் பின்னர் எல்லை கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்ற முயற்சிகள்  குறைந்துள்ளதாக மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கடந்த சித்திரை மாதம் 10 ஆம் திகதி மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைவாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 27 மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்திருந்தனர். 

இதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து திட்டமிட்ட குடியேற்றங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான செயலணி ஒன்று பாராளுமன்ற  உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைவில் உருவாக்கப்பட்டது. 

மேற்படி விஜயம் இடம்பெற்று பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்று, அதற்கு பின்னர் செயலணியும் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட தடவைகள் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் காணிகளுக்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சித்துள்ளதுடன்,  சில இடங்களில்  பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றது.

இதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் காணிகளில் அடாத்தாக தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நாயாறு பகுதியில் தமிழ் மக்களின் வாடிகள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தமையினால் விளைந்த பயன் என்ன? எனவும், இந்த விடயம் தொடர்பாக வடமாகாணசபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? என எல்லை கிராமங்களில் வாழும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.