(எம்.ஆர்.எம்.வஸீம்)

திருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளோமென துறைமுகங்கள் பொது சேவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் செயலாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவிக்கையில்,

திருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கடந்த ஜூலை மாதம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்திருந்தார். அதற்கு கடந்த மாதம் 7ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது.

அத்துடன் எண்ணெய் குதங்களை சம்பூரணமாக இந்தியாவுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தொழிற்சங்கங்களுக்கு தெரியாமலே பெற்றுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பில் எமது எதிர்ப்பை நாங்கள் தெரிவிக்கின்றோம். அத்துடன் இந்த எண்ணெய் குதங்களை எங்களுக்கு பயன்படுத்த முடியாமைக்கு முறையான காரணத்தை தெரிவிக்க முடியாது ஏனெனில் எதற்காக நாங்கள் இவற்றை இந்தியாவுக்கு வழங்கவேண்டும் என கேட்கின்றோம்.

அத்துடன் இது நாட்டு மக்களின் பொதுச்சொத்து. அமைச்சரின் தீர்மானத்தை நாங்கள் கண்டிப்பதுடன் இவற்றை வெறுமனே வழங்குவதற்கு இடமளிக்கமாட்டோம். அத்துடன் எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைக்கு செல்லவுள்ளோம். அதற்காக  சட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான தகவல்களை  நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கவிருக்கின்றோம் என்றார்.