சமஷ்டியிலிருந்து ஒருபோதும் விலகோம் - மாவை உறுதி

Published By: Daya

14 Sep, 2018 | 03:14 PM
image

இலங்கை தமிழரசுக்கட்சியின் அடிப்படைக் கோட்பாடு சமஷ்டியாகும். அதற்கே மக்களும் ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த இலக்கினை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து ஒருபோதும் விலகமாட்டோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனதிராஜா தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- பெடரல் கட்சி என்ற பெயராலும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக்கட்சி சமஷ்டிக்கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக முன்வைக்கப்படும் கடும் விமர்சனங்களை அதன் தலைவர் என்ற அடிப்படையில் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்:- இலங்கை தமிழரசுக்கட்சி அடிப்படைக்கோட்பாடுகளிலிருந்து விலகவில்லை. அவ்வாறு விலகுவதற்கு இடமளிக்க மாட்டேன் என பொறுப்புடன் கூறுகின்றேன். சமஷ்டி அடிப்படையிலே இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக உள்ளோம்.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் பிராந்திய சுயாட்சி உள்ளிட்ட சமஷ்டித் தத்துவங்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆம் திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டன.

13ஆம் திருத்தத்தில் சொற்ப அதிகாரங்கள் காணப்பட்டாலும் அவை மத்திய அரசாங்கத்தால் மீளப்பெறுவதற்கான நிலைமைகள் இருந்தன. ஆகவே தான் அதனை இனப்பிரச்சனைக்கான தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதும் 13ஐ சமஷ்டிஅடிப்படையிலான அதிகாரப்பகிர்வுக்கான ஒரு திறவுகோலாக் கருதுகின்றோம்.

திம்புக் கோட்பாடுகள் கொள்கையளவில் ஏற்படுத்தப்பட்டவையாக இருந்தாலும் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்தரப்புக்கும் இடையில்  ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் சமஷ்டிக் கட்டமைப்பிற்கு வடிவத்தினை வழங்குபவையாக இருக்கின்றன. குறிப்பாக கனடா அரசியலமைப்பு நீதிமன்றத்தால் கியூபெக் மக்களுக்காக வழங்கப்பட்ட தீர்வினை அடியொற்றியதாகவும் இந்த உடன்படிக்கை இருந்தது என்பது முக்கியமான விடயமாகின்றது. இதன்பின்னர் சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் அதிகாரங்கள் பகிர்வதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டன. அவையும் சமஷ்டித் தத்துவங்களை உள்ளடக்கியிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பால் துரதிர்ஸ்டவசமாக நிறைவேற்ற முடியாது போனது.

இந்தப் பின்னணியில் தான் 2013ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்தல், 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆகியவற்றுக்கான எமது தேர்தல் அறிக்கைகளில் அரசியல் தீர்வு குறித்த நிலைப்பாட்டினைக் கூறியுள்ளோம். அதாவது 'தமிழர் வாழ்விடங்களில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் அடிப்படையில் அமைந்த தீர்வினை ஆராய்தல்' என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம். அதற்காகவே எமது மக்களும் ஆணைகளை பெருவாரியாக வழங்கியுள்ளார்கள். ஆகவே சமஷ்டி கட்டமைப்பிலான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதிலிருந்து விலகிச் செல்ல முடியாது.

கேள்வி:- சமஷ்டி என்ற பெயர்ப்பலகை அவசியமில்லை என்பதை தாங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- சமஷ்டி என்ற பதம் இடம்பெற வேண்டுமா இல்லையா என்பது தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையில் நாட்டின் தன்மை ஒற்றை ஆட்சியிலானது என்றோ சமஷ்டியிலானது என்றோ நேரடியாக குறிப்பிடப்படவில்லை. 'ஒருமித்த நாடு' என்றே மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு என்பதை முன்வைக்கின்றபோது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்படுகின்றது. ஆகவே அந்த விடயத்தினை மிகக் கவனமாக கையாள வேண்டியுள்ளது. ஆனாலும் நாட்டின் அனைத்து மாகாண முதலமைச்சர்கள் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இது அதிகாரங்கள் மீளப்பெறப்படாது பகிரப்படுகின்றமைக்கு வலுச்சேர்ப்பதாக அமைகின்றது.

ஏற்கனவே வெளியான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஒருமித்த நாடு' என்பது சமஷ்டி தான் எனக் கூறி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கடும்போக்கு சக்திகள் தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளன. அதேபோன்று வடக்குக்கிழக்கில் கஜேந்திரகுமார், முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் ஒருமித்த நாடு ஒற்றை ஆட்சி என்று மக்களுக்கு கூறுகின்றனர்.

புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளில் தற்போது புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைவொன்றை நிபுணர் குழு வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பித்துள்ளது. அந்த முன்மொழிவு வரைவானது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அதுகுறித்து நாம் விவாதிக்க முடியும். அதற்கு முன்னதாக மேற்படி விடயத்தினை ஒரு விவாதப்பொருளாக மாற்றி அதுபற்றி விவாதித்துக்கொண்டிருப்பதானது அரசியலமைப்புச் செயற்பாடுகளுக்கு குந்தகத்தினை ஏற்படுத்துவதாகவே அமைந்துவிடும்.

ஆகவே முன்மொழிவு வரைவானது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அதில் காணப்படுகின்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், சிவில் அமைப்புக்களுடனும், ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளோம். குறிப்பாக எமது மக்கள் மத்தியிலும் அது தொடர்பில் கலந்துரையாடுவோம். அதன் அடிப்படையில் தான் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைவு குறித்து இறுதித் தீர்மானத்தினை நாம் எடுக்கவுள்ளோம்.

இதனைவிடவும் சமஷ்டி தத்துவத்தினைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் அப்போது பொதுச்செயலாளராக இருந்த எனக்கும் எதிராக கடும்போக்குவாதிகளால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கின் மீது தீர்ப்பளித்துள்ளது.

உலக நாடுகளில் காணப்படுகின்ற சமஷ்டி முறைகள், தேசிய இனங்களுக்கான உரிமைகள் ஆகியவற்றை மையப்படுத்தியே அத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் சமஷ்டியைக் கோருவதற்கு எமக்கு உரித்து உண்டு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:- தற்போதுள்ள இக்கட்டான நிலையில் புதிய அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா?

பதில் - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 34.1தீர்மானத்தினை உருவாக்கி இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனையற்ற ஏற்புடனும் நிறைவேற்றுவதில் அமெரிக்காவுக்கும், கூட்டமைப்பின் தலைமைக்கும் பாரிய வகிபாகம் உள்ளது. ஆதில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களுடன் அரசியல் தீர்வு குறித்தும் குறித்துரைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தான் புதிய அரசியலமைப்புப் பணிகளுக்கு எமது ஒத்துழைப்புக்களை அதியுச்சமாக வழங்குகின்றோம்.

மேலும் இடைக்கால அறிக்கையையே மையப்படுத்தி நாடு பிளவுபடப்போவதாக பிரசாரம் செய்யும் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு ஆதரவளிப்பார் எனக் கருதவில்லை. இருப்பினும் எதிர்ப்புக்கள் இன்றி எதனையும் செய்யமுடியாது. இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணியும், ஜே.வி.பியும், நாமும் இணங்கிக்கொண்ட பெருமளவு விடயங்கள் உள்ளடக்கத்தில் காணப்படுகின்றன. ஆகவே மூன்று தரப்பினரும் இணைகின்றபோது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எவ்வாறாயினும் பாராளுமன்றத்திற்கு வருகின்ற இறுதி வரைவு சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகவும், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையிலுமாக இருந்தால் மாத்திரமே நாம் அதனை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்போம்.

கேள்வி:- புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பதில்;- நீண்டகால அரசியல் தீர்வினை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போதும் பெரும்பான்மைத் தலைவர்கள் வழங்குவதற்கு தவறுவார்களாக இருந்தால் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சர்வதேச தரப்புக்களுடன் நாம் ஏற்கெனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.

அந்த கலந்துரையாடல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை. அது எத்தகைய வடிவத்தில் அமையும் என்பதை உரிய தருணத்தில் வெளிப்படுத்துவோம்.

கேள்வி:- அரசியல் தீர்வு விடயத்திற்கு அப்பால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த விடயங்களையே உயிர்ப்புடன் வைத்திருப்பதில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இதனை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

பதில்:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியமை எமக்கு கவலையளிப்பதாக உள்ளது. இருப்பினும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக எமக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்கள்.

அத்துடன் மீண்டும் பிரேரணைகள் கொண்டுவரப்படும் போது தமது செல்வாக்கினை முழுமையாக வழங்குவதாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து பிறிதொரு பிரேரணை கொண்டுவரப்படுவதற்குரிய முயற்சிகளை கூட்டமைப்பு எடுத்துள்ளதா?

பதில்:- ஆம், கனடா ஆரம்பத்திலேயே பிரேரணை கொண்டுவருவதற்கான அறிவிப்பினைச்செய்திருந்தது. தற்போது பிரித்தானியா பிரேரணையை கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 30.1, 34.1ஆகிய தீர்மானங்களில் கனடா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட 24இற்கும் அதிகமான நாடுகள் பங்களிப்பினை வழங்கியிருந்தன.

இதற்கு அமெரிக்காவின் செல்வாக்கும் காரணமாக இருக்கின்றது. ஆகவே அமெரிக்கா எதிர்வரும் காலத்திலும் தனது செல்வாக்கினை எமக்காக பயன்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை விட இந்தியா உட்பட ஏனைய முக்கிய வல்லாதிக்க நாடுகளுடன் நாம் கருத்துப்பரிமாற்றங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.

மேலும் இந்த ஆண்டின் இறுதி வரையிலான காலப்பகுதியையே அரசியல் தீர்வுக்காக கொண்டிருக்கின்றோம். அத்துடன் பொறுப்புக்கூறல் விடயங்களையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்கின்றோம். அதில் திருப்திகரமான நிலைமைகள் இருக்காது விட்டால் ஐ.நா பிரேரணையில் அதன் பிரதிபலிப்பு நிச்சயம் இருக்கும்.

கேள்வி- கூட்டமைப்பு வலிந்து அழைத்து வந்த வடமாகாண முதலமைச்சருடன் முரண்பட்டு மோதிக்கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?

பதில்:- விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றபோது கட்சியின் கோரிக்கைக்கு அமைவாக செயற்படுவேன் என்று சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

அவ்வாறான நிலையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றபோது அவை தொடர்பில் கட்சிக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யத்தவறிவிட்டார். கலந்துரையாடல்களுக்காக நாம் அழைத்தபோதும் சொற்பநேரத்திலேயே வெளியேறி விடுவார்.

பின்னர் பாராளுமன்றத் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களின் போது ஆதரவை நல்காது விட்டாலும் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் தான்போட்டியிட்ட கட்சிக்கு எதிராக அறிக்கைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் போது இரண்டு ஆண்டுகளே பதவியினைத் தொடர்வதாகவும் குறித்த காலப்பகுதியில் சட்ட விடயங்களை நிறைவேற்றிய பின்னர் மாவை.சேனாதிராஜா பதவியைத் தொடரவேண்டும் என்றும் விக்கினேஸ்வரனே கோரினார்.

இருப்பினும் நாம் அவரை தொடர்ந்தும் பதவியில் நீடிக்கவே விரும்பினோம். ஆனால் அவர் தனது கடமைகளை மறந்து விட்டார். அரசியல் தீர்வு முக்கியமானது. அவர் தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்த போது அதுதொடர்பாக எதுவும் கட்சிக்கு தெரிவிக்கவில்லை. மாறாக அப்பேரவையின் உறுப்பினர்கள் எம்மை வந்து சந்தித்திருக்கின்றனர்.

ஆரசியல் தீர்வு விடயத்தில் விக்கினேஸ்வரன் கவனத்தினைக் கொண்டிருந்தாலும் போரினாலே பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வாதர விடயங்களை பெற்றுக்கொடுத்து மீளக் கட்டியெழுப்புதற்கு உதவியிருக்க வேண்டும்.

சர்வதேசத்துடன் உறவுகளைப் பேணி பிராந்திய முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தியிருக்காலம். அவற்றிலிருந்து தவறியிருக்கும் அவர் ஐந்து ஆண்டுகள் நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையிலும் அறிக்கைகளை அதிகமாகவே வெளியிடுகின்றாரே தவிர ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.

கட்சிமீதான விமர்சனம், அமைச்சரவை விடயம் உள்ளிட்ட பல்வேறுவிடயங்களில் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகளை மையப்படுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை தற்போது கூட எம்மால் எடுக்க முடியும். ஆனால் அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நாம் தயாராகவில்லை. மாறாக எதிர்காலத்தில் மேலும் ஐந்து வருடங்களை வீணாக்குவதற்கு நாம் தயாராகவில்லை.

கேள்வி:- முதல்வர் விக்கினேஸ்வரன் கூட்டமைப்பினையும், தலைமையையும் கொள்கை ரீதியாக பகிரங்கமாக விமர்சித்தாகிவிட்ட நிலையில் மீண்டும் அவர் வேட்பாளராக களமிறங்குவது என்பது இயலாத விடயம். அப்படியாயின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்?

பதில்:- விக்கினேஸ்வரன் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் முடிவெடுக்கவுள்ளது. அதன் பின்னரே வேட்பாளர் குறித்த முடிவினை அறிவிப்போம்.

கேள்வி:- 2013ஆம் ஆண்டு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளே தங்களை பிரேரித்திருந்தனரல்லவா? ஆகவே தற்போது வாய்ப்பு கிட்டியுள்ள நிலையில் தாங்கள் களமிறங்க தயாராகவுள்ளீர்களா?

பதில்:- 2013இல் நான் போட்டியிடவேண்டும் என்றே பங்காளிக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் விரும்பினார்கள். இருப்பினும் அப்போதைய ஜனநாயக மறுப்பு ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமையொன்று இருந்தது.

போராட்டப்பாதையில் வந்தவர் என்பதால் அவ்வாறான ஒருங்கிணைப்புக்களைச் செய்யும் பாத்திரத்தினை வகிக்கவே நானும் விரும்பினேன். அதனால் நானும் அதிகளவில் அக்கறை காட்டவில்லை. அத்துடன் மட்டக்களப்பில் நாங்கள் சிறைப்பட்டிருந்த காலத்தில் அந்த மாவட்டத்திற்கு நீதிபதியாக வருகைதந்திருந்த விக்கினேஸ்வரன் எமது போராட்டத்தினை மதித்து நான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பிணை அளித்திருந்தார். அன்றிலிருந்து அவர் மீது எனக்கு அபிமானம் இருந்தது.

இவை அனைத்தினதும் அடிப்படையில் சம்பந்தன் அவரது பெயரை முன்மொழிந்த போது நானும் வரவேற்றிருந்தேன். இதனால் எனது கட்சிக்குள்ளேயே பலர் என்மீது கோபமுற்றிருந்தனர். தற்போது கூட நான் தவறிழைத்து விட்டதாகவும் விமர்சிக்கின்றார்கள்.

அன்று நான் எடுத்த முடிவு சரியானது. அன்று நான் பதவியை முதன்மைப்படுத்தி சிந்திக்கவில்லை. ஆனால் இலங்கையில் முதன்மையான மாகாண சபைகளில் ஒன்றான வடமாகாண சபையின் தற்போதைய செயற்பாடுகளால் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். இந்த சலிப்பின் பிரதிபலிப்புக்களினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இதனால் கூட்டமைப்பிற்குள் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாவாக முதலமைச்சரே இருக்கின்றார். அதனடிப்படையில் முன்பு இழைத்த தவறை நான் மீண்டும் விடுவதற்கு தயாராக இல்லை.

நான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாராகவுள்ளேன். கட்சிக்குள்ளும் உறுப்பினர்கள் அத்தகைய முன்மொழிவுகளை செய்துள்ளார்கள். யாழ்.தமிழரசுக்கட்சி தீர்மானத்தினை எடுத்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்த இறுதி முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எடுக்க வேண்டியுள்ளது.

கேள்வி:- தனது எதிர்காலம் குறித்து நான்கு தெரிவுகளை முன்வைத்துள்ள முதல்வர் விக்கினேஸ்வரனுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாரா? அவ்வாறு பேச்சுக்கள் நடைபெறுமாயின் அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஓரணியில் திரள்வதற்கு வாய்ப்புண்டா?

புதில்:- விக்கினேஸ்வரன் தனக்கு நான்கு தெரிவுகள் இருப்பதாக கூறுகின்றார். முதலில் அவர் தெளிவாக ஒரு நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்த கட்டம் குறித்து நாம் தீர்மானிப்போம். எவ்வாறாயினும் மீண்டும் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கான நிலைமைகள் மிகவும் பலவீனம் அடைந்துள்ளன.

குறிப்பாக அமைச்சரவை தொடர்பில் அவர் எடுத்த பிழையான தீர்மானங்கள், அச்சபையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், குறிப்பாக கற்றாலை விடயத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான விடயங்கள், ஊழல்கள் இடம்பெற்ற அமைச்சுக்குப் பொறுப்பான ஐங்கரநேசனை பாதுகாக்கின்றமை, தமிழரசுக்கட்சியின் அமைச்சர்களாக இருந்த சத்தியலிங்கம், குருகுலராஜாவை நீக்கியமை, டெனிஸ்வரன் விடயத்தில் அவர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கூட மதிக்காது செயற்படுகின்றமை இவற்றுக்கெல்லாம் பொறுப்புக்கூற வேண்டிய விக்கினேஸ்வரன் அமைதியாக இருக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நிலைமைகள் பலவீனம் அடைவதற்கு காரணமாகின்றன.

கேள்வி:- தாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகின்றபோது, தமிழரசுக்கட்சியின் தலைமையும், பொதுச்செயலாளரும் பிராந்திய அரசியலுக்குள்ளே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழல் எழுகின்றது. இது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடுமல்லவா?

பதில்:- உலகநாடுகளின் உதாரணங்களின் பிரகாரம் அவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டதாக காணமுடியவில்லை. வடக்குக் கிழக்கிற்கான உரிய கடமைகளை எமது கட்சியும் கூட்டமைப்பும் நிறைவேற்றும் இருப்பினும் அடுத்த சந்ததியினருக்கு கட்சியின் பொறுப்புக்களை வழங்குவதற்கு எண்ணியிருக்கின்றேன். ஏற்கெனவே அதற்கான கடிதத்தினை கட்சிக்கு வழங்கியுள்ளேன்.

அடுத்த இளம் சமுதாயம் கட்சிப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று கருதுகின்றேன். அடுத்த மாநாட்டில் அவ்வாறான மாற்றங்கள் நிகழும். அவ்வாறு நிகழ்கின்றபோது பதவிகளை முதன்மைப் படுத்தாது அந்த சந்ததியினருக்கு வழிகாட்டிகளாக நிச்சயம் இருப்போம்.

(நேர்காணல் ஆர். ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49