(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 

உடுவே தம்மாலோக்க தேரரின் விடயம் நீதிமன்ற நியமங்களுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதனால்  அதுதொடர்பாக   எந்தவிதமான பதில்களையும் வழங்கமுடியாது.  அவ்விடயம் தொடர்பில் பதிலளிப்பதானது நீதிமன்றத்தையும், தேரரையும் அவமானப்படுத்தும் செயலாகுமென சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற  உறுப்பினர் விமல் வீரவன்ச  சபையில்  ஒழுங்குப் பிரச்சினையையெழுப்பினார். நேற்று  கைது செய்யப்பட்ட உடுவே தம்மாலோக்க தேரர் தொடர்பாக நான் சபையின்  கவனத்தில் கொண்டுவந்த போது அக்கைது விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக சபை முதல்வர் குறிப்பிட்டார். அவரின் கைதுக்கான காரணம்  என்னவென விமல் வீரவன்ச எம்.பி. கேள்வியெழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, அத்தேரரின் கைது விடயம் நீதிமன்றத்தின் நியமங்களுக்கு உட்பட்டுள்ளதால் அவரது தொடர்பாக சபையில் எதனையும் கூறமுடியாது. அவ்விடயம் தொடர்பாக கருத்துகளை வெளியிடுவதானது நீதிமன்றத்தையும்  தேரரையும் அவமானப்படுத்தும் செயலாகும் என்றார். 

இதன்போது இந்த நாட்டில் தொடர்ந்தும் தேரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதாக கூறுகின்றீர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை  மே மாதத்தில் மாற்றுவதாக கூறுகின்றீர்கள் அவ்வாறிருக்கையில்  தேரர்களை ஏன் பழிவாங்குகின்றீர்கள் எனக் கேள்வியெழுப்பினார்.