இலங்கையின் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யோசனைகளை சமர்ப்பித்துள்ளார்.

பராhளுமன்றத்தில் குழுநிலை விவாதம் இடம்பெறும்வேளை சட்டமூலத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல்வடிவ ஆவணத்தில் கொலைகளிற்கு ஆயுள் தண்டனையே வழங்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் எனினும் இலங்கை குற்றவியல் கோவையின் கீழ் கொலைகளிற்கு மரணதண்டனையை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதனை மாற்றக்கூடாது என தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை பொலிஸாரே அமுலாக்கவேண்டும் என நகல்வடிவ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள  விடயங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கவேண்டும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம்  பயங்கரவாத சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில்  நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனுமதியளிக்கின்றது.

எனினும் புதிய நகல்வடிவ ஆவணத்தில் இது நீக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும்  அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் கடும் விவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தில்கூட  வாக்குமூலங்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது பயங்கரவாதத்தால்  பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஏன் பொருந்தாது என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் மங்கள சமரவீரவும் திலக்மாரப்பானவும் அவரின் கருத்தை எதிர்த்துள்ளனர்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் விஜயதாச ராஜபக்சவிற்கு ஆதரவளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயதாச ராஜபக்சவின் யோசனைகளை ஆதரித்துள்ளார்

பயங்கரவாதத்தை குற்றமாக அறிவிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.