இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை குறித்த ஐநாவின் முக்கிய குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பலர் எதிர்பார்த்ததை விட முன்னேற்றத்தின் வேகம் மிகவும் மெதுவானதாகவே காணப்படுகின்றது என ஜேர்மனி மசடோனியா மொன்டினீக்ரோ பிரிட்டன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

முக்கியநடவடிக்கைகளை எடுப்பதில் போதிய முன்னேற்றம் காணப்படாததால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது என நான்கு நாடுகளும் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபாட்டை வெளிப்படுத்துவதையும் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் செயற்படத்தொடங்கியுள்ளதையும் இலங்கை குறித்த முக்கிய குழு வரவேற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் இழப்புஈடு தொடர்பான அலுவலகத்தை உடனடியா ஏற்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை தொடர்பான குழு  படையினரிடமுள்ள நிலங்களை விடுவிக்கும் நடவடிக்கையையும் வரவேற்றுள்ளது.

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் கடந்த கால விவகாரங்களை கையாள்வதற்கு தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறை முக்கியமானது என்பதை ஏற்றுக்கொண்டது எனவும் இலங்கை தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த பொறிமுறைகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தராதரத்திலான சட்டங்களை கொண்டுவரும் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை எனவும் இலங்கை தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை பணியாளர்கள் தாக்கப்படுவது துன்புறுத்தப்படுவது குறித்த சமீபத்தைய அறிக்கைகள் கவலையை அளித்துள்ளது எனவும் இலங்கை குறித்த குழு தெரிவித்துள்ளது.

உறுதியான தலைமைத்துவம் மற்றும் தெளிவான கால அட்டவணையுடனான  செயற்திட்டம் ஆகியவற்றின் மூலம் இந்த அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் முன்னேற்றத்தை காண்பிக்க முடியும் எனவும் இலங்கை தொடர்பான குழு  தெரிவித்துள்ளது.