வத்தளை - உஸ்வெட்டகெய்யாவ கடற்பகுதியில் கலந்துள்ள மசகு எண்ணெய் காரணமாக,  குறித்த பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உணவிற்கு எடுத்துக்கொள்வதில், எவ்வித சுகாதாரப்  பாதிப்புக்களும் இல்லை என,  சமுத்திரப்  பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைச்  சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள்,  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக,  சமுத்திரப்  பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இது தொடர்பிலான  விசேட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நாரா தெரிவித்துள்ளது. 

இது தவிர, நீர்கொழும்பு மற்றும்  ஹிக்கடுவ ஆகிய  கடற்பகுதிகளிலும் இந்த எண்ணெய்க் கசிவுகள், தற்போது ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பில் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும்,  சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான முதற்கட்ட விசாரணை அறிக்கைகள்,  எதிர்வரும் இரு தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள் கொண்டுவரப்பட்ட கப்பலிலிருந்து அவை இறக்கப்படும் சந்தர்ப்பத்தில்,  குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிலையில், பின்னர்  குழாயில் ஏற்பட்ட இக்கசிவு வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக,  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.