இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி எவ்வாறு தவிர்க்கப்பட்டன என்பது குறித்து தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன

குறிப்பிட்ட மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான தொடரின் ஒளிபரப்பு உரிமைகளை பெற்றுள்ள சொனி நிறுவனம் தன்னால் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு வழங்கப்பட்ட நிதியை வெளிநாடொன்றில் உள்ள வங்கிக்கணக்கிற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக எச்சரித்ததை தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பிரதம நிதி அதிகாரி கடந்த மூன்றாம் நான்காம் திகதிகளில் சொனி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் 5மில்லியன் டொலர்களை வெளிநாடொன்றிலுள்ள வங்கி கணக்கிற்கு மாற்றுமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை அதிகாரி முன்னரும் சொனி நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார்.

இதன் காரணமாக சொனி நிறுவனத்திற்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவர்கள் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் முக்கிய அதிகாரிகளிற்கு அந்த மின்னஞ்சல்களை அனுப்பிவைத்துள்ளனர்.

எனினும் மின்னஞ்சல் அனுப்பபட்ட முகவரியில் காணப்பட்ட பிழையால்  அந்த மின்னஞ்சல்கள்  உரியவர்களை சேரவில்லை.

இதனை தொடர்ந்து தொலைபேசி மூலம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை தொடர்புகொண்ட சொனி நிறுவனம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வாவை தொடர்புகொண்டு பிரதம நிதி அதிகாரி வழங்கிய வங்கிகணக்கிற்கு பணத்தை அனுப்பவா என கேட்டுள்ளது.

மேலும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வழங்கிய வங்கி கணக்கிற்கும் பிரதம நிறைவேற்று அதிகாரி வழங்கிய வங்கி கணக்கிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளதையும் சொனி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து சந்தேகம் கொண்ட ஆஸ்லி டி சில்வா பிரதம நிதியதிகாரியிடமிருந்து விளக்கத்தை கோரியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.