இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, 4:1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக களமிறங்கி, 332 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 292 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதன்பின்னர் 40 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 423 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

இதில் அலெய்ஸடர் குக் 147 ஓட்டங்களையும் ரூட் 125 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா, விஹாரி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், ஷமி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

464 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி இரண்டு ஓட்டங்களுக்கே மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

அதன்படி தவான் 1 ஓட்டத்துடனும், புஜாரா மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ராகுலும் ராகனேயும் இணைந்து ஜோடி சேர்ந்து ஆடி வர நான்காம் நாள் நிறைவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் நேற்று ஆரம்பித்த ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ரஹானே சற்று நேரம் நிதானமாக நிலைத்து நின்று ஆடி 37 ஓட்டங்களை பெற்றபோது ஜென்னிங்ஸுடைய பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அவரையடுத்து வந்த விஹாரியும் ஓட்டம் எதையும் பெறாது டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் கைகோர்த்த ராகுல் மற்றும் இளம் வீரான பந்த் ஜோடி நிதானமாகவும், அபாரமாகவும் விளையடி இந்திய அணிக்கு பெரும் பலம் சேர்த்தது. 

ஆரம்ப துடுப்பாட்க்காரராக களமிறங்கிய ராகுல் டெஸ்ட் போட்டியில் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்ய, அவருக்கு பக்க பலமாக நின்று ஆடி வந்த பந்த்தும் டெஸ்ட் போட்டியில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.

ராகுல் 149 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ரஷத்தின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து 150 ஓட்டங்களை பெறும் வாய்ப்பினை மயிரிழையில் தவறவிட்டார்.

இவரையடுத்து சிறப்பாக ஆடி வந்த பந்தும் 114 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த வெளியேற இந்திய அணி  345 ஓட்டங்களக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் அண்டர்சன் மூன்று விக்கெட்டுக்களையும், குர்ரன் மற்றும் ரஷித் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் புரோட், மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

இதன் மூலம் ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக அலெய்ஸ்டர் குக் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் குர்ரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.