யாழ்ப்பாணம்  - உரும்பிராய் செல்வா மணி மண்டபத்தில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் மறு உத்தரவு வழங்கும்வரை அங்கு உணவு மற்றும் குளிர்பானங்களைத் தயாரிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு வழங்கியது.

எனினும் வேறு இடத்தில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்களை பரிமாறுவதற்கு நீதிமன்று அனுமதியளித்துள்ளது.

யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள செல்வா மணி மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற திருமண நிகழ்வில் வழங்கப்பட்ட ஆட்டிறைச்சிக் கறியால், மூன்று பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய உரும்பிராய் பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அந்த மண்டபத்தின் முகாமையாளரான இளம் பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

பழுதடைந்த ஆட்டிறைச்சிக் கறியை உணவில் சேர்த்தமை, வைத்திய சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் உணவைக் கையாண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் மண்டபத்தின் முகாமையாளர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை பிணையில் விடுவித்த நீதிவான், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் அந்த மண்டபத்தில் அடுத்து வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதாக உரும்பிராய் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கவனத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது.

அதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று மற்றொரு விண்ணப்பத்தை உரும்பிராய் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தாக்கல் செய்தார்.

“அந்த மண்டபத்தில் சுகாதாரச் சீடுகள் உள்ளன. அதனால் அவற்றைச் சீர்செய்யும்வரை மண்டபத்தில் இடம்பெறும் சுப நிகழ்வுகளுக்கான உணவு மற்றும் குளிர்பானங்களைத் தயாரித்துப் பரிமாறுவதற்கு தடை உத்தரவு வழங்கவேண்டும்” என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மன்றில் முன்னிலையாகி விண்ணப்பம் செய்தார்.

அவரது விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், மன்றின் மறுகட்டளை வரை உணவு மற்றும் குளிர்பானங்களைத் தயாரிக்க செல்வா மணிமண்டப முகாமைத்துவத்துக்கு தடை உத்தரவை வழங்கினார்.