ஆயுட்காலச் சிறைத்தண்டனையைக் குறைப்புச் செய்வதற்கு தனக்கு இருக்கும் சட்டரீதியான அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் 7 கைதிகளையும் விடுதலை செய்விப்பதில் தோல்வி கண்ட தமிழ்நாட்டின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் இப்போது சாத்தியமான அரசியலமைப்பு ரீதியான பரிகாரம் ஒன்றை நாடியிருக்கிறது.இந்திய அரசியலமைப்பின் 161 வது சரத்தின் கீழ் மாநில ஆளுநருக்கு இருக்கும் மன்னிப்பு  அதிகாரத்தை அணுகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.குற்றவியல் நடவடிக்கை கோவையின் ஏற்பாடுகளின் கீழ் தண்டனைகளைக் குறைப்புச் செய்வதற்கு 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னைய முயற்சியை தடுத்துநிறுத்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான கலந்ததாலோசனையை வேண்டிநிற்கின்ற எந்தவொரு வழக்கிலும் ஆயுட்காலச்சிறைத் தண்டனை குறைப்பு விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் அபிப்பிராயத்துக்கே  முதன்மை அந்தஸ்து இருக்கிறது என்று இறுதியில் தீர்ப்புக் கூறியது.2018 ஏப்ரிலில் மாநில அரசாங்கத்தின் யோசனைக்கு சம்மதம் தெரிவிக்க முறைப்படி மறுத்த மத்திய அரசாங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டால் அது " பயங்கரமான முன்னுதாரணத்தை வகுப்பதாக அமைந்துவிடும் என்பதுடன் சர்வதேசரீதியான விளைவுகளையும் கொண்டுவரும் " என்று கூறியது.ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருக்கும் மன்னிப்பு அதிகாரம் மிகவும் விரிவானது என்பதில் சந்தேகமில்லை.ஆனால், அந்த அதிகாரத்தை அரசியல் காரணங்களுக்காக அல்லது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு எதிராக கடந்த காலத்தில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்திருந்தது.தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இப்போது மாநில அமைச்சரவையின் ஆலோசனை குறித்து பரீசீலித்து அதற்கு தான் கட்டுப்பட்டவரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவேண்டியவராக இருக்கிறார்." உச்ச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பொன்றினால் " தீட்டப்பட்ட " கொடிய சதித் திட்டமொன்றில் " சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு எதிரான மத்திய அரசாங்கத்தின் அபிப்பிராயத்தை ஆளுநர் பரிசீலனைக்கு எடுப்பாரா அல்லது மாநில அமைச்சரவையின் யோசனையை நிராகரிப்பாரா அல்லது அந்த யோசனையை மீள்பிரிசீலனை செய்யுமாறு கேட்பாரா என்பது முக்கியமான கேள்வியாகும்.இதில் எந்த முடிவை அவர் எடுத்தாலும் அது நீதித்துறையின் மீளாய்வுக்கு ஆட்படும் என்பதை மனதில் இருத்தியே அவர் செயற்படுவார்.இந்தக் கைதிகளில் சிலரின் கருணை மனுக்கள் ஆளுநராலும் ஜனாதிபதியினாலும் நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும் கூட, அரசியலமைப்பின் 161 வது சரத்தின் பயன்களை கைதிகள் பெறுவதில் எந்தவிதமான சட்டரீதியான தடையும் இல்லை என்று தமிழ்நாடு அரசாங்கம் நம்புகிறது.ஆனால், இந்த விவகாரம் நடைமுறைகளுடன் தொடர்புபட்ட பெருவாரியான கேள்விகளைக் கிளப்புகிறது.உதாரணமாக, கைதிகளில் நால்வர் இலங்கைப் பிரஜைகள்.அவர்களுக்கு என்ன நடக்கும் ? விடுவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருப்பார்களா? அல்லது இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவார்களா?சகலரையும் ஒருமித்து விடுவிப்பதற்கு பிறப்பிக்கப்படக்கூடிய ஒரு உத்தரவு அவர்களில் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட விவகாரத்தின் தனித்தன்மைகளைக் கவனிக்கப்போவதில்லை அல்லது குற்றச் செயலில் அவர்களது பாத்திரத்தின் தன்மையையோ அல்லது அவர்களைவிடுதலை செய்தால் தனால் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்தையோ கணிப்பிடப்போவதில்லை.கோட்பாட்டு அடிப்படையில் நோக்குகையில், நீண்டகாலமாக சிறைவாசத்தை அனுபவித்துவரும் கைதிகள் மீது இரக்கம் காட்டவேண்டியது அவசியம் என்ற சிந்தனையில் தவறுகாண முடியாது.விடுதலை பற்றிய அற்பசொற்ப நம்பிக்கையும் இல்லாமல் வாழ்நாள் பூராவும் ஒருவரை அடைத்துவைப்பதென்பது உண்மையில் நவீன சமூகத்தின் சிந்தனைக்கு இசைவானதல்ல.ஆனால், மரணதண்டனை தொடர்பில் அத்தகைய தீர்மானத்தை எடுத்தால் அதனால் ஏற்படுகின்ற தாக்கத்தை அலட்சியம் செய்வது சாத்தியமில்லை.ஆயுட்காலச் சிறைத்தண்டனை என்பது மரணதண்டனைக்கு ஒரு மனிதாபிமான ரீதியான மாற்று என்று கருதப்படும் நிலையில் ஆயுட்காலச் சிறைக்கைதிகளை விடுதலை செய்வதென்பது மரணதண்டனையை விதிக்கவேண்டுமென்ற கோரிக்கையைப் பலப்படுத்துவதாக மாத்திரமே போய்முடியும்.அது பிற்போக்குத்தனமானதாகும்.கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சியின் பின்னால் பலவிதமான அரசியல் காரணங்கள் இருந்தாலும் கூட, இந்த விவகாரத்தை சட்டக்கோட்பாடுகளின் அடிப்படையில் மாத்திரமே தீர்மானிக்கவேண்டும்.( த இந்து ஆசிரிய தலையங்கம், 11 செப்டெம்பர்  2018)