(இரோஷா வேலு) 

இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்கள் ஹோமாகம பிரதேசத்தில் வைத்து நேற்று  காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது கொழும்பு 5, ஹிபுதான மற்றும் பம்புகஹபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 31,34 மற்றும் 44 வயதுகளையுடைய மூன்று பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

தம்மை அரசாங்கத்தில் வேலைப்பார்க்கும் உயர் அதிகாரிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த மூன்று பெண்களும் இவ்வாறு பண மோசடியில் ஈடுபடுவதாக ஹோமாகம பொலிஸாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. 

இம்முறைப்பாட்டையடுத்து குறித்த இரண்டு பெண்களையும் தேடி சென்ற பொலிஸாரால் ஹோமாகம பிரதேசத்தில் காணப்படும் விகாரையொன்றுக்கருகில் வைத்து மேலும் சிலருக்கு அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி நியமனக் கடிதங்களுக்கு பிணை வைக்க பணம் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதற்காக அரச நிறுவனங்களில் வேலைப்பெற்றுத் தருவதை போன்று நியமனக் கடிதங்களை தயாரித்துள்ளதுடன், அந்நியமனங்களை பெற்றுக்கொள்ள ஒரு தொகைப் பணத்தை பிணையாக வைக்க வேண்டுமெனக் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கையில் பல காலமாக ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவர்கள் பிணைப் பணமாக பல்வேறுபட்ட நபர்களிடமிருந்து ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கு தக்கதாக 12,500 ரூபா வரையில் பெற்றுக்கொள்வதாகவும் சந்தேகநபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.