கடலிலிருந்து முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்ட குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, தொன் கணக்கான எண்ணெய் கடலில் கலந்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என,  சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இலங்கை கடற்பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து எண்ணெய்யை அகற்றும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுவதாகவும்  கடற்படை தெரிவித்துள்ளது.

 இந்தநிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள் கொண்டுவரப்பட்ட கப்பலிலிருந்து அவை இறக்கப்படும் சந்தர்ப்பத்தில்,  குழாயில் கசிவு ஏற்பட்டதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை,  குழாயில் ஏற்பட்ட கசிவு, கடந்த சனிக்கிழமையன்று நண்பகல் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக,  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்த போதிலும்,  திக்கோவிட்ட – தல்தியவத்த மற்றும் உஸ்வெட்டகெய்யாவ உள்ளிட்ட கடற்பரப்புக்களில் எண்ணெய் படிந்திருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

 மூன்று நாட்களுக்குள் அந்தக் கப்பலிலிருந்து நாட்டிற்கு எரிபொருளைப்  பெற்றுக்கொள்ள முடியும். மூன்று  அல்லது நான்கு  நாட்களுக்குள் குறித்த கடலில் ஏற்பட்டுள்ள நிலைமையை மாற்றி, வழமையான  நிலைமைக்குக் கொண்டுவர முடியும். அத்துடன்,  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பல்வேறுபட்ட  கருத்துக்கள்கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

மின் உற்பத்திக்குக் கொண்டுவரப்பட்ட மசகு எண்ணெய்யே  இவ்வாறு கசிந்துள்ளது என்பதை, ஒவ்வொருவரும்  புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான எண்ணெய் போதுமானளவு கையிருப்பிலுள்ளது என,  பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 தற்போது குறித்த பகுதிக்குச் செல்ல முடியுமா என்பது தொடர்பில் நாம் மக்களுக்கு அறிவிப்போம். அதுவரை குறித்த  கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். அந்த எண்ணெயில் காணப்படும் விஷத்தன்மையினால், மக்களுக்கு  பாதிப்புக்கள் ஏற்பட இடமுண்டு.

இதேபோன்று,  அந்தப் பகுதியில் கடல் வாழ் உயிரினங்களுக்கும்கூட பாதிப்புக்கள்  ஏற்பட முடியும். அந்தப்  பாதிப்புக்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் ஆராயப்படும். குறித்த  நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை  எடுப்பதற்கு தாம் செயற்பட்டுள்ளோம் என,  சமுத்திரப்  பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டுள்ளார். 

 இதேவேளை, இது மிகவும் பழைமையான குழாயாக இருப்பதால், அதனைப் புதுப்பிப்பதற்கான தீவிர  நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டுள்ளோம். தற்போதைக்கு எதுவிதப் பிரச்சினைகளுமில்லை. குறித்த கடல் பிரதேசத்திற்கு,  பாரிய பாதிப்புக்கள்  ஏற்படுமா என்ற அச்சம் காணப்பட்டது. அதனைத் தடுக்க தம்மால்  முடிந்துள்ளது. 

 சில குழாய்கள் 60, 70 வருடங்கள் பழமையானவை. இவற்றுக்கு விலை மனு கோரியுள்ளோம். நிதியைக்கூட  கோரியுள்ளோம். இது மிகவும் முக்கியமானதொன்று. குழாய்க் கட்டமைப்பை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும். இவ்வாறு  அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

 கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இந்தக் குழாய்களில் கசிவுகள் ஏற்பட்டன. ஆறு  வருடங்களுக்கு முன்னர் இந்தக் குழாய்க் கட்டமைப்பு அமைக்கப்பட்டது. இது புதிய குழாய்க் கட்டமைப்பு. ஒரு மாதத்திற்கும்  மேலாக,  புதிதாகக் கொண்டுவந்த குழாய்களை புதிதாக பொருத்துவதைத் தாமதமாக்கியுள்ளனர். 

 எந்தவித நடவடிக்கைகளும்  எடுக்கப்படவில்லை. இதில் கசிவு காணப்படுகின்றது என எமது ஊழியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், அந்தக் கசிவு காணப்படுகையில், அந்தப் பகுதியில் கிறிஸ் பூசிப்  பயன்படுத்தினர். 

பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில், நிறுவனத்தில் குறைபாடுகள் காணப்படுமாயின், அதனை நாட்டிற்குக் கூறுவது எமது பொறுப்பாகும் என, ஸ்ரீ லங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பந்துல சமன்குமார குறிப்பிட்டுள்ளார்.