தலைநகர் கொழும்பில் நாளை  முற்பகல் 11.30 மணியளவில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த போராட்டமானது, கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் அண்மையில் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் அபிவிருத்தி அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஏனைய அபிவிருத்தி அதிகாரிகளை போன்று மாதாந்த சம்பளத் திட்டத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்பதை முக்கிய பிரச்சினையாக வலியுறுத்தியும்  சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் போக்குவரத்து கொடுப்பனவை பெற்றுக் கொள்ளல், அரசாங்கத்தினால் முன்னெடுக்கும் அபிவிருத்தி செயற்திட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் குறித்த போராட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.