பாரிய சூறாவளி தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்காவின் தென் கரோலினாவின் கரையோரங்களில் வாழும் மில்லியன் கணக்கான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புளோரன்ஸ் என்ற சூறாவளி தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.

புளோரன்ஸ் சூறாவளி காரணமாக முன்னர் எப்போதும் இல்லாத பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது . 

கடும் காற்று வீசக்கூடும் கடும் மழை காரணமாக பாரிய வெள்ளம் ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை மிகவும் ஆபத்தான சூறாவளி தாக்கக்கூடும் என அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

புளோரன்ஸ் மிக பெரியது, மிக வலுவானது ,அதனை எதனாலும் தடுக்க முடியாது என தென் கரோலினாலின் ஆளுநர் ஹென்றி மக்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தென்கரோலினாவின் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ள ஆளுநர் ஒரு மில்லியன் மக்கள் வெளியேற வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.