உலகில் இலட்சத்தில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே நிணநிர் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கட்டி உருவாகத் தொடங்கும். அந்த குழந்தைகளுக்கு பசி எடுக்காது.

வலி எடுக்கும். சிலருக்கு வயிறு பெரிதாகும். வயிற்றில் நிணநிர் சுரப்பிகளில் ஏற்படும் இந்த குறைபாட்டால் அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். முன்பு இதனை தொடக்க நிலையில் கண்டறிவது கடினமாக இருந்தது.

தற்போது மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துவிட்டதால், இதனை சி. டி. ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு லேப்ராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை செய்து இதனை குணப்படுத்துகிறார்கள்.

இதன் போது வயிற்றில் மூன்று துளையிடப்பட்டு, வயிற்றில் உள்ள நிணநீரை முழுவதுமாக உறிஞ்சி எடுத்துவிட்டு, பிறகு அந்த கட்டியை முழுவதுமாக அகற்றிவிடுவார்கள்.

அதன் பிறகு அந்த குழந்தைகளுக்கு வழக்கம் போல் பசியெடுக்கத் தொடங்கும். வலியும் இருக்காது. அவர்கள் உணவு உட்கொள்ளவும் தொடங்குவார்கள்.

இந்த வகையில் அண்மையில் இந்தியாவில் இரண்டு கிலோ எடையுள்ள நிணநீர் கட்டியை லேப்ராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் Lymphatic Malformation என்ற அரிய பாதிப்பிற்கும் நவீன சத்திர சிகிச்சை மூலம் தீர்வு கண்டறியப்பட்டிருக்கிறது.