இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டித் தொடரின் நான்காம் நாள் ஆட்ட நேர முடில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்று 464 என்ற ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி போராடி வருகின்றது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக களமிறங்கி, 332 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாது 95 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அதன்படி இங்கிலாந்து அணி 40 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து துடுப்பெடுத்தாடி வந்தபோது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதற்கிணங்க ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆடுகளத்தில் அலெஸ்டைர் குக் 46 ஓட்டத்துடனும் அணித் தலைவர் ரூட் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நேற்றைய தினம் 114 ஓட்டத்துடன் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் குக் மற்றும் ரூட்டின் ஜோடியை இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு அசைக்க முடியாது போனது.

இந்திய பந்து வீச்சாளர்கள் பல வியூகங்களை வகுத்து பந்து வீசினாலும் இவர்களின் விக்கெட்டுக்களை அவர்களால் தகர்த்தெறிய முடியவில்லை.  

ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்கி நிதானமாகவும் நுணுக்கமாகவும் ஆடி வந்த குக் இறுதிப் போட்டியில் இறுதி இன்னிங்ஸில் சதம் விளாச, அவரதை் தொடர்ந்து ஜோ ரூட்டும் அவரது பங்கிற்கு சதம் அடித்தார்.

இறுதியாக ஜோ ரூட் 125 ஓட்டத்துடனும், அலஸ்டைர் குக் 147 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ஓட்த்துடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை இடை நிறுத்திக் கொண்டது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு மொத்தமாக 464 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணியத்தது.

பந்து வீச்சில் இந்தி அணி சார்பில் ஜடேஜா, விஹாரி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், மெஹமட் சமி இரண்டு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் 464 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே தவான் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அதன்படி தவான் ஒரு ஓட்டத்துடன் அண்டர்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த புஜாராவும் டக்கவுட் முறையில் வெளியேறினார்.

இதையடுத்து விராட் கோலி, நிதமானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்ப்பார் என அனைத்து இந்திய ரசிகர்களினாலும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் விராட் கோலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, ரசிகர்களின் கனவு கலைந்தது.

இதனால் இந்திய அணி 2 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மூன்று விக்கெட்டுக்களை இழந்து மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தது. அடுத்து ராகுலும் ராகனேயும் இணைந்து மேற்கொண்ட போராட்டத்துக்கு இணங்க இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட  நேர முடிவின் போது மூன்று விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் அண்டர்சன் 2 விக்கெட்டுக்களையும் புரோட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

இந்திய அணிக்கு வெற்றி பெறுவதற்கு 406 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. இன்று போட்டியின் இறுதி நாளாகும்.