ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு விரைவில் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என கட்சியின் பின்வரிசை ஊழியர்கள், தொடர்ச்சியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடன் வலியுறுத்தினர்.

இதற்கமைவாக, வியட்நாம் விஜயத்தின் பின்னர் இதுதொடர்பில் தீர்க்கமான முடிவெடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வரிசை கட்சி உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்க ரவி கருணாநாயக்க முக்கிய அங்கம் வகித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அவருடைய அமைச்சு பதவி பறித்துள்ளமை ஐக்கிய தேசியக் கட்சியை கொழும்பில் பலவீனப்படுத்தும் செயலாகும்.

எனவே உடனடியாக ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சு பதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் வியட்னாம் விஜயத்தின் பின்னர் தீர்மானிப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாட உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.