(நெவில் அன்தனி)

டாக்கா பங்கபந்து தேசிய விளையாட்டரங்கில் மாலைதீவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஏ குழு போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை அணி போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

 

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. இரண்டு அணிகளாலும் போடப்பட்ட கோல்கள் ஓவ்சைட் நிலையிலிருந்து பெறப்பட்டதாக மத்தியஸ்திரினால் நிராகரிக்கப்பட்டது.

இப் போட்டி முடிவை அடுத்து இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு சற்று பிரகாசமடைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியில் மாலைதீவுகள் 3 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் இலங்கைக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும்.

இப் போட்டியில் கட்டாய வெற்றியைக் குறிவைத்து களம் இறங்கிய இலங்கை அணியினர் மிகத் திறமையாக விளையாடி பல தடவைகள் மாலைதீவுகள் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தபோதிலும் கொல் போடுவதற்கான அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி உபாதைக்குள்ளான வழமையான அணித் தலைவர் சுபாஷ் மதுஷான், எம். சி. எம். ரிப்னாஸ் ஆகிய இருவரும் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறவில்லை. மதுஷானுக்குப் பதிலாக சுஜான் பெரேரா தலைமைப் பொறுப்பை ஏற்றதுடன் டிலான் டி சில்வா, ஹர்ஷ பெர்னாண்டோ ஆகிய இருவரும் முதல் பதினொருவர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

போட்டி ஆரம்பித்ததுமுதல் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய மாலைதீவுகள் அணியினர் 3ஆவது, 16ஆவது, 22ஆவது, 43ஆவது ஆகிய நிமிடங்களில் கோல் போட எடுத்த முயற்சிகளில் இரண்டை இலங்கை கோல்காப்பாளர் சுஜான் பெரேரா அபாரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தினார்.

மறுபுறத்தில் இலங்கை அணியினரும் அவ்வப்போது மாலைதீவுக்ள அணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 24 ஆவது நிமிடத்தில் 19 வயதான இளம் வீரர் அசேல மதுஷான் போட்ட கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து பெறப்பட்டதாக ஜோர்தான் மத்திஸ்தர் மத்தியஸ்தர் மஹ்மூத் அரபாவினால் நிராகரிக்கப்பட்டது. 

இடைவேளை நெருங்குகையில் மாலைதீவுகள் அணி வீரர் மொஹமத் ஹம்ஸா கோல் போட எடுத்த முயற்சி வரக்காகொடவினால் திசை திருப்பப்பட்டது.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல்கள் போட்டிருக்கவில்லை.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது இலங்கை அணியினர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததுடன் மாலைதீவுகள் கொல் எல்லையையும் ஆக்கிரமித்தனர். 

போட்டியின் 53 ஆவது நிமிடத்தில் மாலைதீவுகள் அணி வீரர் அலி பஸீரின் 30 யார் ப்றீ கிக் இடது கோல் கம்பத்துக்கு சற்று அப்பால் சென்றது. மறுபுறத்தில் இலங்கை அணியினர் பந்தை முன்னோக்கி நகர்த்த முயற்சித்தபோதிலும் எதிரணயினர் அவற்றைத் தடுத்தவண்ணம் இருந்தனர். சற்று நேரத்தில் மாலைதீவுகள் அணிக்கு கிடைத்த கோல் போடும் சிறந்த வாய்பை கோல் வாயிலில் மொஹமத் இருபான் தவறவிட்டார்.

போட்டியின் 66ஆவது நிமிடத்தில் அசிக்கூர் ரஹ்மான் 42 யார் தூரத்திலிருந்து வேகமாக உதைத்த பந்தையும் சற்று நேரத்தில் 18 யார் தூரத்திலிருந்து பஸால் உதைத்த பந்தையும் மாலைதுீவுள் கோல்காப்பாளர் அலி சமூஹ் அலாதியாக இடதுபுறமாகத் தாவிப் பிடித்து பலத்த பாராட்டைப் பெற்றார். 74ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லைக்குள்ளிருந்து கவிந்து இஷான் உதை்தத்த பந்து கொல் காப்புக்கு மேலாக சென்றது. போட்டியின் 81ஆவது நிமிடத்தில் அசேலவுக்கு கிடைத்த கோல் போடுவதற்கான அரிய வாய்ப்பும் 2 நிமிடங்கள் கழித்து கவிந்து இஷானுக்கு கிடைத்த வாய்ப்பும் தவறவிடப்பட்டன. 

போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் மாலைதீவுகள் அணியின் மொஹமத் இருபான் போட்ட கோல் ஓவ்சைட் நிலையிலிருந்த பெறப்பட்டதாக மத்தியஸ்தரினால் நிராகரிக்கப்பட்டது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் இரண்டு அணியினரும் கோல் போட எடுத்த முயற்சிகளும் கைகூடாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.