இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 51 ஓவர்களுக்கு 174 ஓட்டங்களை பெற்று தடுமாறி வருகிறது.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் லண்டன், ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 122 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து சார்பாக ஜொஸ் பட்லர் 89 ஓட்டங்களையும், குக் 71 ஓட்டங்களையும், மெயின் அலி 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும் பும்ரா மற்றும் இஷாந் சர்மா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆறு ஓட்டங்களை பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன்படி தவான் மூன்று ஓட்டங்களுடன் புரோட்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

தவானை வெளியேற்றத்த‍ை தொடர்ந்து புஜாரா களமிறங்கி ராகுலுடன் இணைந்து நிதானமாக ஆட இந்திய அணியின் ஓட்டம் அதிகரித்தது. இருப்பினும் 22.1 ஓவரில் இந்திய அணி 70 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது இரண்டாவது விக்கெட்டினை பறிகொடுத்தது.

அதன்படி குர்ரனின் பந்து வீச்சில் ராகுல் 37 ஒட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் 37 ஒட்டங்களுடன் அண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரகானே வந்த வேகத்திலேயே ஓட்டம் எதையும் பெறாது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 103 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் இந்திய அணித் தலைவர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் விகாரி அதிரடி ஆட்டத்தை வெளிக் காட்ட ஆரம்பித்ததனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது.

எனினும் சிறப்பாக ஆடி வந்த கோலி 49  ரன்களில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு பென் ஸ்டோக்கின் பந்து வீழ்ச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்ததார்.

இறதியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 51 ஓவர்களுக்க 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

அதன்படி விகாரி 25 ஓட்டத்துடனும், ஜடேஜா 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், பிராட் மற்றும் குர்ரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதன்படி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 158 ஓட்டங்களில் பின்தங்கியுள்ளது.

இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட இந்தியா 158 ரன்கள் பின் தங்கியுள்ளது.