நோர்வேயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி தமிழர்கள் 54 பேரிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் மொத்தம் ஒருகோடியே 62 இலட்சம் ரூபாவை பெற்று அவர்களை மோசடிக்காரர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இராமநாதபுரம், சிவகங்கை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேருக்கு நோர்வே நாட்டில் இராணுவத்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, விழுப்புரத்தைச் சேர்ந்த ஹரி, நாகர் கோயிலைச் சேர்ந்த முனியசாமி ஆகியோர் அவர்களிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் 1 கோடியே 62 இலட்சம் ரூபா வாங்கியுள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட இவர்கள் குறித்த 54 பேரையும் நோர்வேக்கு அனுப்பி வைக்காது இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது இவர்கள் ஏமாற்றப்பட்டு நோர்வே நாட்டிற்கு செல்ல முடியாமல் கடந்த 24 ஆம் திகதி முதல் இலங்கை, கொழும்பில் உணவு, நீரின்றி தவித்துவருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே இவர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.