(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பொதியிடப்பட்ட பால் குறித்து அவ்வெதிரணி பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறது.

அது குறித்து பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது அது சம்பந்தமாக அவதானம் செலுத்தவுள்ளதாக அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

 கடந்த புதன் கிழமை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடி தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். எனினும் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசாங்கம் பல்வேறு உபாயங்கள் மூலம் பேரணியைத் தடுப்பதற்கு சூழச்சி செய்தது. எனினும் அது முடியாது போனது. ஆகவே கொழுத்தும் வெயிலில் நின்றுகொண்டு நாட்டைக்காக்க வேண்டும் எனப் போராடிய மக்களுக்கு பாலில் வஷம் கலந்து கொடுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இவ்வாறான இழிசெயல்களை ஒருபோதம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலுக்காக மக்களின் உயிர்களுடன் விளையாடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் கூட்டு எதிர்க்கட்சியினால் அவ்வாறு பால் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே சூட்சுமமான முறையில் திட்டமிட்டு குறித்த சில இடங்களில் இவ்வாறான பால் வழங்கப்பட்டுள்ளது.