இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவேண்டாம் என அமெரிக்கா விடுத்துள்ள வேண்டுகோளை சிரியா புறக்கணிக்கும் பட்சத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்க இராணுவம் ஆராய்ந்து வருவதாக  சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் இது குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க படையதிகாரியொருவர் சிரியா எச்சரிக்கைகளை மீறினால் என்ன நடவடிக்கையை எடுப்பது குறித்து நாங்கள் திட்டமிட்டுள்ள விடயங்களை டிரம்ப் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டிரமப் நாங்கள் இராணுவரீதியான நடவடிக்கைகள் குறித்து  தயாராகயிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றார்.இதேவேளை சிரியாவின் வடமேற்குபகுதியில் உள்ள இட்லிப்பில் நிலை கொண்டுள்ள படையினர் இரசாயன ஆயுதங்களை தயார் செய்துவருகின்றனர் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என சிரியாவிற்கான அமெரிக்காவின் புதிய விசேட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில்  எஞ்சியுள்ள பகுதி மீது மேற்கொள்ளப்படும் எந்த தாக்குதலும் நிலைமையை மேலும் மோசமானதாக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்இந்த எச்சரிக்கையை நாங்கள் விடுப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன என தெரிவித்துள்ள ஜிம் ஜெவ்ரி இரசாயன ஆயுதங்களை தயாரிக்கின்றனர் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய சிரிய படையினர் மேற்கொள்கின்ற இரசாயன தாக்குதல்கள் உட்பட்ட தாக்குதல்கள் காரணமாக பெருமளவு மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.