முல்லைத்தீவு செம்மலை நாயாறு பகுதியில் மக்களின் காணிகளில் விகாரை ஒன்றினை அமைத்து அந்த பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் இரண்டாவது தடவையாக இன்றையதினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி களவாக அளவீட்டு பணியினை மேற்கொள்ளவருகைதந்த தொல்பொருட்த்திணைக்களம் மற்றும் நில அளவீட்டுதிணைக்களத்தினரை பொதுமக்கள் அளவீட்டுப்பணியினை மேற்கொள்ளவிடாது விரட்டியடித்துள்ளனர்.

இன்றையதினம்  குறித்த பகுதியில் அமைந்துள்ள விகாரையை விஸ்தரிக்கும்நோக்குடன் செம்மலை கிராம மக்களின் காணிகள் மற்றும் பொது மயானம் அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் இடம்பெறுவதை அறிந்து.

 குறித்த இடத்துக்கு சென்ற மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினை சேர்ந்தவர்கள் மற்றும் செம்மலைக்கிராம பொதுமக்கள் அருட்தந்தை தயாகரன் ஆகியோர் தொல்பொருட்த்திணைக்களம் மற்றும் நிலஅளவை திணைக்கள அதிகாரிகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு உடனடியாக அளவீட்டுப்பணிகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதுக்கு அமைவாக எதிர்ப்பினை தங்க முடியாத திணைக்கள அதிகாரிகள் அளவீட்டு பணிகளை இடைநிறுத்தி திரும்ப சென்றுள்ளனர்.

கடந்த மாதம் இதேபகுதியில் அளவீட்டு பணிகள் இடம்பெற்றபோது காணி உரிமையாளர்களான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் குறித்தபகுதிக்கு வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரதாபன் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினை எடுக்கும்வரையில் இந்த பகுதிகளில் அளவீட்டு பணிகளை மேற்கொள்ளமுடியாது என தெரிவித்து சென்றிருந்தார். 

இருந்தபோதிலும் பிரதேச செயலாளரின் உத்தரவையும் மீறி பிரதேச செயலகத்தின் அனுமதிகள் எதுவுமின்றி தொல்பொருள் திணைக்களத்தினரும் நிலஅளவை திணைக்களத்தினரும் இன்றையதினம் அளவீட்டுக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.