மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த புதன் கிழமை இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிக்கை மூலம் குழந்தையை  பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இந் நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை குறித்த தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர் ஒருவரும், பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியுள்ளதோடு, பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகள் இரவரையும் மன்னார் பொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை பிணையில் விடுவித்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்தே மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை‍ இன்று 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான வைத்திய அதிகாரி மற்றும் மகப்போற்று வைத்திய நிபுணர் ஆகியோர், குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை என எழுத்து மூலமாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளனர்.

அத்துடன் இன்று 2 ஆவது நாளாகவும் வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்ந்து இடம்பெற்ற நிலையில் மன்னார் பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், வைத்தியர்கள், வைத்திய நிபுனர்கள், மன்னார் மறைமாவட்ட ஆயர்  இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.