ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு உறுதியாகவுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு குறித்து  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே  ஜெயக்குமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு உறுதியாகவுள்ளது  உச்சநீதிமன்றின் தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தீர்ப்பை பெருமகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன் என ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

27 வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் எடுக்கவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.