30ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் தீபம் ஏந்திய மோட்டார் பவனி ஜனாதிபதியின் தலைமையில் இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து ஆரம்பமானது. 

மகாவலி வலய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேசம் வரை கொண்டு செல்லும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 30ஆவது முறையாகவும் செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. 

சர்வமத ஆசீர்வாதங்களின் பின்னர் ஜனாதிபதிவினால் தீபமேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 30ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் தீபம் ஏந்திய மோட்டார் பவனி உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

தீபத்தை ஏந்திச் செல்வோர், மோட்டர் சைக்கிள்கள், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் மகாவலி வலய பிரதிநிதிகள் ஆகியோர் இந்த தீபத்தை ஏந்திச் செல்லும் பவனியில் இணைந்து கொண்டுள்ளனர். 

கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டி வரை 1111 கிலோமீற்றர்கள் 111 மகாவலி கிராமங்கள் ஊடாக பயணிக்கும் இப் பயணத்தின்போது விளைநிலங்களை மேலும் பசுமைப்படுத்தும் நோக்குடன் 111,111 பலா மரக் கன்றுகளை வழங்கும் மரநடுகை செயற்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதனை ஆரம்பித்து வைக்கும் முகமாக சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதியினால் பலா மரக் கன்று நடுகை செய்யப்பட்டது.

தேசிய பொருளாதாரத்திற்கு மகாவலி அபிவிருத்தி திட்டம் அளித்துவரும் பங்களிப்பு தொடர்பான புரிந்துணர்வை வழங்கும் நோக்கில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த  மரநடுகைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாவலி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.