ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் உள்ள மல்யுத்தம் பயிற்சி மையம் ஒன்றில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியதாகவும். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.  

இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயிற்சி மையத்தில் மீட்பு குழுவினர் மற்றும் நிருபர்களை குறி வைத்து மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. 

இதில், அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் சிலர் உட்பட 20 பேர் பரிதபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்  70க்கும்  மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.