ஊழல் மோசடிகளற்ற தூய்மையான ஆட்சியொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவை சுயாதீன ஆணைக்குழுவாக பலப்படுத்துதல் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 

அத்துடன் சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழுவை அமைக்கக் கிடைத்தமை இதன் முக்கிய வெற்றி என்பதுடன் 40, 50 வருட காலமாக பேச்சளவில் மட்டுமே இருந்துவரும் கணக்காய்வு சேவையை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளளோம்.

நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக தான் நியமித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தி தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை பிரயோகித்து தண்டனை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் மக்களின் சொத்துக்களையும் அரச நிதியையும் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் மரண தண்டனையையும் உட்படுத்த வேண்டுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

இன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.