சிறந்த விவசாயிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலா பானு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

வடமாகாண சபையின் விவசாய , கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி , உணவு வழங்கல், நீர் வழங்கல் , நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழும் விவசாய திணைக்களத்தின் மீண்டுவரும் செலவீன நிதி ஒதுக்கீட்டின் கீழும்

 சிறந்த அன்னாசி செய்கையாளருக்கான தெரிவு, சிறந்த அடர்முறையிலான மாமர செய்கையாளருக்கான தெரிவு,  சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளருக்கான தெரிவு,  சிறந்த சேதன விவசாய செற்கையாளருக்கான தெரிவு ஆகிய தலைப்புக்களின் கீழ் விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டத்தின் கீழ்  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இதன்படி இப்போட்டி முதலில் விவசாய போதனாசிரியர் மட்டத்தில் நடாத்தப்பட்டு முதல் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். 

இரண்டாம் கட்டமாக மாவட்ட மட்டத்தில் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் விவசாயிகளுக்கு பணப்பரிசில், வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்படவுள்ளது.

இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் உங்கள் பகுதியிலுள்ள விவசாய போதனாசிரியர் காரியாலயத்திலும் மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம், வவுனியாவிலும் போட்டிக்கான விதிமுறைகளை அறிந்து கொண்டு விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இம்மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விவசாய போதனாசிரியரிடம் கையளிக்க வேண்டும்.

மாவட்ட மட்ட  வெற்றியாளர்களுக்கு உழவர் பெருவிழாவில் வைத்து கௌரவம் வழங்கப்பட்டு பணப்பரிசில், வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ் என்பனவும் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.