மியன்மாரின் ராக்கைன்  மாநிலத்தில் ரொஹிங்கியா இனத்தவர்களை அந்நாட்டு இராணுவம் இனப்படுகொலை செயவதாக ஆகஸ்டில் ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியது. 

அப்பாவி ரொஹிங்கியாக்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்தே கடந்த வருடம் ஆகஸ்டில் அந்த இனத்தவர்களில் 7 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அயல்நாடான பங்களாதேஷுக்கு தப்பியோடினார்கள் என்பது முழு உலகிற்கும் தெரியும். ஆனால், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக குற்றச்செயல்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களே சிறைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாரம் மியன்மாரின் நீதிபதியொருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் இரு பர்மிய  ஊடகவியலாளர்களுக்கு 7 வருடச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.அவர்கள்  ரொஹிங்கியாக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பாரிய மனிதப்புதைகுழி தொடர்பாக ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். இராணுவத்தின் கொடுமைகள் அம்பலப்படுத்தப்படுவதை தடுக்கும் இரு நடவடிக்கையாகவே அந்த ஊடகவியலாளர்கள் மீது வழக்குச் சோடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காலனித்துவ காலச் சட்டம் ஒன்றின் கீழேயே அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். 9 மாதங்களாக நடந்த போலித்தனமான வழக்கு விசாரணையைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்பது அபத்தமானதாகும். ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் ஆராய்ந்துகொண்டிருந்த படுகொலை இடம்பெறவில்லை என்று எவருமே மறுக்கவில்லை. சில அதிகாரிகள் அதில் சம்பந்தப்பட்டிருந்ததை இராணுவமே ஒத்துக்கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்திற்காகப் போராடியதற்காக 1991 ஆம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவரான ஆங்சான் சூ கீ தலைமையிலான அரசாங்கமே இப்போது மியன்மாரில் பதவியில் இருக்கிறது. ஊடகவியலாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பது குறித்து அவர் மௌனம் சாதிப்பது வேதனை தருவதாக உள்ளது. ராக்கைன் மாநிலத்தில் ரொஹிங்கியாக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற கொடுமைகள் குறித்தும் அவர் எதுவும் பேசுவதாக இல்லை. தனது அரசாங்கத்தின் பெயரில் சிந்தப்படுகின்ற இரத்தத்துக்காக அவர் பதவியில் இருந்து இறங்கியிருக்க வேண்டும். பதவியில் இருந்துகொண்டு நல்ல காரியங்களைச் செய்யலாம் என்று அவர் கணிப்பிடுகிறார். ஆனால், அவ்வாறு நல்லதாக எதுவும் நடப்பதாக இல்லை என்பதே உண்மையாகும்.

முஸ்லிம் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக இராணுவம் மேற்கொள்கின்ற படுகொலைகளுக்கான ஒரு மனிதகேடயமாக ஆங் சான் சூ கீ பயன்படுத்தப்படுகின்றார் என்றே சொல்லவேண்டயிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை சொன்னதைப் போன்று அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு பாரதூரமான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்குப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது.

பிரதம தளபதி மின் ஆங் லைங் தலைமையிலான இராணுவத்தின் மீது ஆங்சான் சூகீயுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இராணுவத்தின் முதன்மை நிலை புதிய அரசியலமைப்பில் ஆழமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து இராணுவத்தின் முதன்மை நிலைக்கான நிலைமாற்றத்தின்போது அவதானிக்கப்படாத ஒரு அம்சம் இது.‍ இந்த நிலைமாற்றத்தின் கீழான முதல் தேர்தல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற அனுமதிக்கப்பட்டது.

மத்திய பாராளுமன்றத்திலும் மாநிலங்களின் சட்டசபைகளிலும் சுமார் 25 சதவீத ஆசனங்கள் இராணுவத்துக்காக ஒதுக்கப்படுகின்றன. மத்திய அரசாங்கத்தின் மூன்று முக்கிய அமைச்சர்களை இராணுவத்தின் பிரதம தளபதியே நியமிக்கிறார். இருந்தாலும், ரொஹிங்கியாக்களுக்கு எதிராக அவரது இராணுவத்தினால்  இழைக்கப்படுகின்ற கொடுமைகள் குறித்து ஒரு வார்த்தை தானும் பேசாமல் அவரை ஜேர்மனி, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் இவ்வருடம் வரவேற்று விருந்தோம்பியிருக்கின்றன. அதேவேளை, ஃபேஸ்புக் ஒரு அரசாங்க நிறுவனமாக இல்லாவிட்டாலும் கூட அவரது இராணுவத்துக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அதாவது அவரின் ஃபஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு 28 இலட்சம் நண்பர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றது.அவரை உண்மையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும்.

ஆங் சான் சூ கீ உண்மையிலேயே பாசாங்குத்தனமான ஒரு ஜனநாயகத்தையே நடத்துகிறார். அவரது தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய கழகத்தின்( National League for Democracy- NLD ) அரசாங்கம் இரு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக பதவியில் இருக்கிறது. ஆனால், இராணுவ ஆட்சியின் கீழ் பணியாற்றிய அதே அதிகாரிகளும் உத்தியோகத்தர்களுமே புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்காகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் இராணுவத்தின் வகிபாகத்தை மாற்றியமைக்கவேண்டுமென்றால் சகல சிவிலியன் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் முற்றுமுழுதான இணக்கப்பாடு அவசியமாகும். பாராளுமன்ற அரசியலின் போட்டாபோட்டித் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அத்தகைய இணக்கப்பாடு அனேகமாகச் சாத்தியமில்லை என்று தான் சொல்லவேண்டும்.

சிவிலியன் அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கக் கூடியதாக மேலும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு சர்வதேச சமூகம் மியன்மார் இராணுவத்தின் மீது நெருக்குதலைப் பிரயோகிக்க வேண்டியது அவசியமாகும். ஜனநாயகவாதிகள் ஜனநாயகப் பண்புநெறிகளுக்கு ஆதரவாக உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும். தவறுகளைத் தட்டிக்கேட்க ஆங்சான் சூ கீ தனக்கிருக்கும் அரசியல் அந்தஸ்தைப் பயன்படுத்தவேண்டும். ஊடக சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் அவர் பாதுகாக்கவேண்டும். அதைச் செய்யவில்லையென்றால் அவர் தனது விடுதலைக்காகக் குரல் கொடுத்துப் போராடியவர்களுக்கு துரோகம் செய்கிறார் என்பதே அர்த்தமாகும்.

அவருக்கு முன்னால் தெரிவுகள் இருக்கின்றன. ராக்கைன் மாநிலத்துக்கு விஜயம் செய்து நிலைவரங்களைப் பார்வையிடுவது நல்லது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட சகல மதச்சமூகங்களினதும் மக்களையும் சந்திக்கவேண்டும்.ஆனால் அவற்றைச் செய்யாமல் அவர் மௌனத்தையே சாதிக்கிறார்.

மியன்மாரின் ஜனநாயகத் தலைவி என்று வர்ணிக்கப்பட்ட ஆங் சான் சூ கீயை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உலகம் நோக்கியது.ஆனால், அப்படி எதையுமே இன்று காணக்கூடியதாக இல்லை.

(வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம் )