சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தை கொலைசெய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் முயன்றார் எனினும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என வெளியாகியுள்ள புதிய நூலொன்று தெரிவித்துள்ளது.

டிரம்பின் உத்தரவு ஆபத்தானதாக பாதிப்பை ஏற்படுத்துவதாகயிருந்தால்  அந்த உத்தரவுகளை அவரின் சிரேஸ்ட அதிகாரிகள் புறக்கணித்தனர் என்பதை சித்தரிக்கும்  அச்சம்:வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்ற நூலிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 11ம் திகதி இந்த நூல் வெளியாகவுள்ளது.

டிரம்ப் தீங்குவிளைவிக்கும் மனப்போக்கு மற்றும் ஆத்திரத்தில் முடிவெடுக்கும் குணாதிசயத்தை கொண்டவர் என அந்த நூலில் அதன் ஆசிரியர் வூட்வேர்ட் தெரிவிக்கின்றார்.

2017 இல் சிரியா இரசாயன ஆயுத தாக்குதலை மேற்கொண்ட பின்னர் சிரியா ஜனாதிபதியை கொல்லவேண்டும் என டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டிஸிடம் தெரிவித்துள்ளார் என அச்சம்:வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் அதற்கான திட்டத்தை தயாரிக்கின்றேன் என தெரிவித்த மட்டிஸ் எனினும் சிரியா மீது மட்டுப்படுத்தப்பட்ட விமானதாக்குதல்களையே மேற்கொண்டார் எனவும் வூட்வேர்ட் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் டிரம்ப் ஐந்தாம் வகுப்பு மாணவன்போல நடந்துகொள்கின்றார் என மஸ்டிஸ் சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  குறிப்பிட்ட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை டிரம்ப் நிராகரித்துள்ளார்.

இது மற்றுமொரு மோசமான புத்தகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.