(இரோஷா வேலு) 

கைக்குண்டு, கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 3 பேர் நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய அதிவேக வீதி மேம்பாலத்திற்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை பொலிஸார் பரிசோதனையிட்ட போது கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய வசந்த திசாநாயக்க மற்றும்  பேருவளையைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் அனீப் ஆகியோரே இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துருகிரிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று அதிகாலை 12.50 மணியளவில் அத்துருகிரிய அதிவேக வீதி மேம்பாலத்திற்கு அருகில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை பரிசோதனைக்குட்படுத்த வேளையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு கிராம் 830 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொஸ்லந்த - உஸ்ஸல்ல பிரதேசத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட நபரொருவர் கொஸ்லந்தை பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 கரதன கிரிஹல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கொஸ்லந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விசேட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபரின் வீட்டின் பின் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த  4000 ஆயிரம் கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்த நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.