கிளிநொச்சியில் பொலிஸார் இஞ்சம் பெறுவதாக தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  காலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது நீதிமன்ற வளாகத்தின் வெளியே ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட மரத்தில் ஏறி முதியவர் பொலிஸார் இலஞ்சம் வங்குவதாக வாசகம் எழுதப்பட்ட பதாகையை கையில் ஏந்தி போராட்டம் மேற்கொண்டிருந்தார்.

இந் நிலையில் நீதி மன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாகவும் அவர் கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன் அவரை கிளிநொச்சி பொலிஸார் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் முதியவரால் இலஞ்சம் பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றோசான் பெர்னாண்டோவின் உத்தரவின்படி எவ்வித விசாரணைகளுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.