அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்ட்டுள்ள எனது மருமகன் அப்பாவி என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டு அவுஸ்திரேலியாவில் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையை சேர்ந்த நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரை நேசிக்கின்றோம் ஆனால் எவராவது தவறு செய்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஒரு குடும்பம் என்ற வகையில் நாங்கள் அவர் அப்பாவி என்றே கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

குடும்பம் என்ற அடிப்படையில் அவர் தவறு  இழைத்திருக்க மாட்டார் என நாங்கள் கருதுகின்றோம்,இது குறித்து நாங்கள் உயர்ந்தபட்ச நம்பிக்கை கொண்டுள்ளோம்,எனினும் நீதித்துறை தனது கருத்தை தெரிவிக்கும் வரை நாங்கள் பொறுமையாகயிருக்கவேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் முன்கூட்டியே  விடயங்களை மதிப்பிட முயலவில்லை  நாங்கள் அவரை நம்புகின்றோம் நேசிக்கின்றோம் என்பதை மாத்திரமே எங்களால் தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிஜாம்டீன் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள பின்னர் இதுவரை குடும்பத்தவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள பைசர் முஸ்தபா  குடும்பத்தினர் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபருடன் தொடர்புகொள்வதற்கான நடைமுறையொன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் நீதித்துறையை மதிக்கின்றோம் பொருத்தமான தருணத்தில் நாங்கள் அவரை தொடர்புகொள்ள முடியும் என நாங்கள் கருதுகின்றோம்  எனினும் குடும்பத்தவர்கள் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிஜாம்டீன்  தாக்குதல் முயற்சிக்கான திட்டங்களை தீட்டியிருப்பார் என நான் கருதவில்லை அவர் இறுதியாக இலங்கை வந்தபோது மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் அனைவரிலும் பாசத்துடன் காணப்பட்டார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை பொறுத்தவரை இது கடினமான தருணம்,எனினும் பயங்கரவாதம் என்ற சர்வதேச பிரச்சினையை நீதித்துறை கையாளவேண்டியுள்ளது,சந்தேகம் வந்தால் அவுஸ்திரேலிய அரசாங்கமும் அது குறித்து கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான் அமைச்சராக உள்ளேன் என்பதற்கான இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடாது அது பிழையான விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிஜாம்டீன் ஏனைய இளைஞர்களை போன்றவர்   அவர் விளையாடுவார் அவர் நடனமாடுவார், இலங்கை அவுஸ்திரேலிய இளைஞர்களிடமிருந்து அவர் வித்தியாசமானவர் இல்லை,எனகுறிப்பிட்டுள்ள அமைச்சர் குடும்பத்தவர்கள் அனைவரும் மனமுடைந்த நிலையில் உள்ளனர் எனினும் இது அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதால் அங்கு சிறந்த நீதித்துறை உள்ளதால் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.