விமானத்தில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிற்கு எதிராக கோசமிட்ட சோபியா என்ற மாணவி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாஜகவிற்கும் தமிழக அரசிற்கும் எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தூத்துக்குடி நோக்கி விமானத்தில்பயணம் செய்துகொண்டிருந்த தமிழிசையை பார்த்ததும் அதேவிமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த சோபியா என்ற இளம் பெண் பாசிச பாஜக ஒழிக என கோசமிட்டுள்ளார்.

மேலும் பாஜகவிற்கு எதிராக விமானத்திற்குள்ளேயே  அவர் கோசங்களை எழுப்பியுள்ளதுடன் தமிழிசையுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக விமானம் தரையிறங்கியதும் தமிழிசை  பொலிஸாரிடம் புகார் செய்ததை தொடர்ந்து சோபியா கைதுசெய்யப்பட்டுள்ளார்

சோபியா மருத்துவர் ஒருவரின் மகள் என்பதும் கனடாவில் கல்விகற்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சோபியா கைதுசெய்யப்பட்டதற்கு ஸ்டாலின் சீமான் ஆகியோர் கடும்  எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனநாயக விரோத தமிழக அரசின் கருத்துரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்க தக்கது என தெரிவித்துள்ள ஸ்டாலின்  உடனடியாக சோபியாவை விடுதலை செய்யவேண்டும் என கோசமெழுப்பியுள்ளார்.

பாஜகவிற்கு எதிராக  கோசமெழுப்பவர்கள் எல்லோரையும் கைதுசெய்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின்  நானும் சொல்கின்றேன் பாசிச பாஜக ஒழிக என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதேபோன்று சீமானும் நானும் சொல்கின்றேன் பாசிச பாஜக  ஒழிக என பதிவு செய்துள்ளார்.