மியன்மாரின்அரசஇரகசியங்கள் குறித்த சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அந்த நாட்டின் நீதிமன்றம் ரொய்ட்டரின் இரு செய்தியாளர்களுக்கு ஏழு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான மியன்மார் படையினரின் அட்டுழியங்களை அம்பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதம்  கைதுசெய்யப்பட்ட இரு  ஊடகவியலாளர்களிற்கே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வாலோன்,யாவ் சூ இருவரும் இரகசிய ஆவணங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம் மியன்மாரின் மிகப்பழமையான சட்டங்களை மீறினர் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இரு செய்தியாளர்களிடமும் காணப்பட்ட இரகசிய ஆவணங்கள் அரசாங்கத்தின் எதிரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பயனளித்திருக்கும் எனநீதிமன்றம் தெரிவித்துள்ளது

குறிப்பிட்ட ஆவணங்களை நாங்கள் கைதுசெய்யப்படுவதற்கு சற்று முன்னரே பொலிஸார் எங்களிடம் வழங்கினர் இது எங்களை கைதுசெய்வதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என செய்தியாளர்கள் முன்னர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தமை முக்கியமான விடயமாகும்.

ரொய்ட்டரின் இரு செய்தியாளர்களும் மேல்முறையீடு செய்யலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிராக மியன்மார் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் மியன்மார் அரசாங்கமும் ஆங் சாங் சூகியும் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இன்று மியன்மாரை சேர்ந்த ரொய்ட்டர் செய்தியாளர்களுக்கும் உலகில் உள்ள பத்திரிகைகளுக்கும் துயரமான நாள் என ரொய்ட்டர் அறிக்கையொன்றி;ல் தெரிவித்துள்ளது.

இரு செய்தியாளர்களும் அநீதியை அனுமதிப்பதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கையை பார்வையிடுவதற்காக பெருமளவு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்ததை குறிப்பிடத்தக்கது.