(எம்.சி.நஜிமுதீன்)

எதிர்வரும் 05 ஆம் திகதி திட்டமிட்டதுபோல் மக்கள் எழுச்சிப் பேரணியை நடத்தி அரசாங்கத்தை கவிழத்தே தீர்வோம் என கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் கூறிய அவர்,

அரசாங்கம் அச்சப்பட்டு பேரணியைத் தடுப்பதற்கான சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எவ்வாறெனினும் பேரணில் மக்கள் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது.

மேலும் கிராமிய மட்டத்தில்  பேரணியில் கலந்துகொள்ளவுள்ள மக்கள் பிரதிநிதிகளை அச்சப்படுத்தும் செயற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தற்போதைக்கே பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் சத்தியக்கிரகம் மற்றும் எழுச்சிப் பேரணி நடத்தவுள்ளதனால் பொலிஸ் அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.