ஜனாதிபதி செயலகத்தின் புதிய பணிக்குழாம் தலைவராக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமசிறி பெர்ணான்டோ, சிறந்த நிர்வாகத் துறை நிபுணராவார். 

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் தபாற்துறை அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ள ஹேமசிறி பெர்ணான்டோ, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் ஶ்ரீ லங்கா டெலிகொம் ஆகியவற்றின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.