இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை நடத்துவதற்கு மேற்பார்வைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

குறித்த தேர்தலை நடத்துவதற்கு மூவர் அடங்கிய மேற்பார்வைக்குழுவை நியமிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு சார்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுடன் கலந்துரையாடி கிரிக்கெட் சட்டங்களை சீர்திருத்தம் செய்ததன் பின் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சு சார்பில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால கடந்த தேர்தலின் போது  சமர்ப்பித்த பெயர் பட்டியல் சட்ட விரோதமானது என தீர்ப்பு வழங்கி அதனை இரத்து செய்யுமாறு கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் முன்வைத்த மனு மீதான விசாரணை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.