ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் மலிங்க, சந்திமால் மற்றும் குணதிலக்க ஆகியோர் உள்ளவாங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியினை இலங்கை தெரிவுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

அந்த வகையில்  இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை அணியில் மீண்டும்  இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் ஆறு போட்டிகளுக்கு ஐ.சி.சி.யினால் தடை விதிக்கப்பட்ட தினேஷ் சந்திமலும் இலங்கை கிரிக்கெட் சபையினால் தடை விதிக்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவும் இத் தொடரில் விளையாடுவதற்காக அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். 

அஞ்சலோ மெத்தியூஸ் தலமையிலான 16 பேர்களை கொண்ட இலங்கை அணிக் குழாமில் குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டீஸ், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக்க, திஸர பெரோ, தசூன் சானக்க, தனஞ்சய டிசில்வா, அகில தனஞ்சய, தில்றூவான் பெரேரா, அமலி அப்பன்ஷோ, கசூன் ராஜித, சுரங்க லக்மால், துஷ்மந்த சமிரா மற்றும் லசித் மலிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

இதற்கும் மேலதிக வீரர்களாக நிரோஷன் திக்வெல்ல, மதுசங்க, லக்ஷான் சந்தகான்,  நுவான் பிரதீப் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய ஆசியக் கிண்ண போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்பதில் சிக்கல் தோன்றியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசியக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்ற நிலையில் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை அகில தனஞ்சயவின் மனைவி குழந்தையை பிரசவிக்கவுள்ளதால் முதல் சுற்றில் கலந்துகொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில், டினேஷ் சந்திமலுக்கு விரலில் காயமேற்பட்டுள்ளதால் அவரும் ஆசியக் கிண்ணப் போட்டியில் கலந்துகொள்வதில் சந்தேகமெழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக டிக்வெல்ல இணைக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஆசிய கிண்ணப் போட்டிகளில் களமிறங்கவுள்ள இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப் போட்டித் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்  அதிரடி ஆட்டக்காரான ரோஹித் சர்மா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ரோஹித் சர்மா தலமையிலான இந்திய அணி சார்பாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி, மனிஷ் பாண்டே, கேதர் யாதவ், அம்பாத்தி ராயிடு, ஹர்த்தீக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், சர்துல் தாகூர் மற்றும் கலில் அஹமட் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரானது செப்டெம்பர் 28 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.