மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காத் மண்டுவில் நடைபெற்ற வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் நான்காவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 29 ஆம் திகதி நேபாளம் சென்றார். 

இதில் இலங்கை, இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் இதில் பங்கேற்றிருந்தன.

இந்த பிம்ஸ்டேக் மாநாட்டின் இறுதியில் அதன் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மியன்மார் ஜனாதிபதி வின்மைன்ட், நேபாள பிரதமர் பிரஷட் ஒலி மற்றும் நேபாள ஜனாதிபதி பித்தியா தேவி பந்தாரி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

அத்துடன் இந்த விஜயத்தின் போது நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேலும் நேற்யை தினம் நேபாளத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் நேற்றைய தினம் காத்மண்டு நகரிலுள்ள முதலாவது தேரவாத பௌத்த விகாரையான ஆனந்த கு(ட்)டி விகாரைக்கு விஜயம் செய்து  விகாராதிபதி, நேபாளத்தின் பிக்கு சங்க சபையின் தலைவர் சங்கைக்குரிய மைத்ரி மகாதேர தேரரை ஜனாதிபதி சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.