சிரியாவின் இட்லிப்பில் பாரிய இராணுவநடவடிக்கையை எதிர்கொண்டுள்ள பொதுமக்களை அழிவிலிருந்து காப்பாற்றுமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சகலதரப்பினைரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏழு வருடகால யுத்தத்தின் பின்னர் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் இட்லிப் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் அதனை கைப்பற்றுவதற்கான பாரிய நடவடிக்கையை சிரியா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையிலேயே பரிசுத்த பாப்பரசர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

யுத்த காற்று வீசுகின்றது  சிரியாவின் இட்லிப்பிராந்தியத்தில் பாரிய மனித அழிவு ஏற்படலாம் என்ற தகவல் எங்கள் செவிகளை எட்டியுள்ளது என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மதிக்கப்படுவதையும் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் இராஜதந்திரம் பேச்சுவார்த்தை போன்றவற்றை பயன்படுத்தவேண்டும் என பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இட்லிப்பிராந்தியத்தில் பாரிய இராணுவநடவடிக்கை இடம்பெற்றால் சுமார் 700,000 மக்கள் இடம்பெயரவேண்டிவரும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சிரிய அரசாங்கம் இட்லிப்பை கைப்பற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என சிரிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.